Friday 26 April 2019

கோட்டாவை அகற்றுங்கள்..!

கல்வியாளர் டத்தோ என்.சிவசுப்ரமணியம் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

மெட்ரிகுலேஷன் தேர்வு முறையில் மாற்றங்கள் ஏற்பட வழி கூறியிருக்கிறார்.  முற்றிலுமாக இப்போது இருக்கும்  குறிப்பிட்ட இன ரீதியான பங்கு முறைகளை அகற்றிவிட்டு அதனைத் தகுதி முறையில் கொண்டு வாருங்கள் என்று கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

மெட்ரிகுலேஷன் நுழைவு முறையில் மாணவர்களுக்குத்  தகுதி அடிப்படை தான் முக்கியமே தவிர வெறும் பங்கின் அடிப்படையில் கொடுப்பது தகுதியற்றவர்கள் உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்படும் என அவர் நினைக்கிறார்.

உண்மை தான். மறுப்பதற்கில்லை.  ஆனால் இத்தனை ஆண்டுகள் அப்படித்தான் கொடுக்கப்பட்டு அவர்கள் பல்கலைக்கழகம் வரை சென்றிருக்கிறார்கள்!

இந்த நேரத்தில் டத்தோவுக்கு ஒரு நினைவூட்டல் அவசியமாகிறது.  ஏற்கனவே, பாரிசான்  ஆட்சியில், இப்படித்தான்  தகுதி அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு அந்த கோரிக்கையையும் கல்வி அமைச்சு ஏற்றுக் கொண்டது.  அதாவது தகுதி அடிப்படையில். ஆனால் அடுத்த ஆண்டே பூமிபுத்ராக்களின் தகுதி யாரும் எதிர்பாராத அளவு உயர்ந்து விட்டது! 

ஆக,  தகுதி அடிப்படை ஆனாலும் பங்கின் அடிப்படை ஆனாலும் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை எந்த முறையைப் பின்பற்றினாலும் குறையப் போவதில்லை! இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கூடப் போவதுமில்லை!

நாங்கள் இங்கு கல்வியாளர்களாகப்  பேசவில்லை.  சாதாரண வழிப்போக்கர்களாகப் பேசுகிறோம்.  எங்களுடைய பங்கு இவ்வளவு  அல்லது எங்களின் எண்ணிக்கை 3000 மாணவர்கள் என்று வரையறை செய்து விட்டால்  அது கிடைக்கும், அதனைக் கல்வி அமைச்சு நிறைவேற்றும் என நம்பலாம். மற்றபடி தகுதி என்னும் போது கல்வி அமைச்சு ஏமாற்றும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்! இது கடந்த கால அனுபவம்.

பாரிசான் ஆட்சியில் அந்த ஏமாற்று வேலை நடந்தது.  இந்த ஆட்சியும் முந்தைய ஆட்சியையே பின் பற்றுவதால் மீண்டும் அந்த ஏமாற்று வேலை நடவாது என்பதற்கு எந்த உததரவாதமும் இல்லை!

அதனால் எது சரி என்பதைக் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். நேர்மை இல்லாத வரை தகுதி அடிப்படை என்பதை நாம் மறக்க வேண்டும். எண்ணிக்கை அடிப்படை தான் நமக்கு உதவும். 

தகுதியா பங்கா? எது சரி?

No comments:

Post a Comment