Wednesday 21 October 2020

நம்மாலும் முடியும் (2)

 இன்று நாளிதழ்களிலே ஒரு சில செய்திகளைப் பார்க்கிறோம். 

வேலை இல்லாமல் வீதிக்கு வந்த குடும்பங்களப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. படிக்க நமக்கு வேதனை தான். 

என்ன செய்வது? நமது இனம், நமது மக்கள். வீடுகளிலே போதுமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வழி தவறிப் போகின்றனர்.

அம்மாவுக்கும் வாழத் தெரியவில்லை! மகளுக்கு அவள் எங்கே வழி காட்டுவது? அப்பன் குடிகாரன்! அவன் எங்கே தனது பிள்ளைகளுக்கு வழிகாட்டப் போகிறான்?

இப்படித்தான் நமது குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு குடும்பத்தை நடத்த வழி  தெரியாதவன் எல்லாம் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறான்!

இடைநிலைப் பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவன் அவனோடு படிக்கும் ஒரு மாணவியை இழுத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்கிறான். அது கூட முறையான திருமணமாக இருப்பதில்லை.  குழந்தை பிறந்தால் அதை முறைப்படி பிறந்த சான்றிதழ் எடுக்க வேண்டும் என்கிற அக்கறையும் இருப்பதில்லை!  ஒரு வருடம் ஆனப்பிறகு அவன் ஒரு பக்கம்  இவள் ஒரு பக்கம் பிரிந்து விடுகிறார்கள்! அப்பா அம்மா இவர்களை வீடுகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்! இந்த அப்பா அம்மா சரியாக இருந்தால் ஏன் இவர்களைப் போன்ற மாணவர்கள் தவறுகிறார்கள்?

இவர்களைப் போன்றவர்களுக்குக் கடும் தண்டனை கொடுக்காதவரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்! என்ன செய்யலாம்?

அப்படியே ஒழுங்கீனமான குடிகார குடும்பங்களாக இருந்தாலும் தங்களது  படிக்கின்ற குழந்தைகளுக்கு ஆறுதலாகவும் அணுசரணையாகவும் இருக்க வேண்டும். " நாம் தான் குடித்துக் குட்டிசுவரானோம் அவர்களாவது படித்து நல்ல நிலைமைக்கு வரட்டும்!"  என்று கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.  ஆனால் அவர்கள் குடிப்பதை மட்டும் வீட்டுக்கு  வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். அது தான் நிபந்தனை!

எத்தனையோ குடிகார தகப்பன்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருக்கிறார்கள். இல்லை என்று சொல்லிவிட முடியாது.

தேவை எல்லாம் தங்களது பிள்ளைகள் மீது கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பாசம், அவர்களது எதிர்காலம் பற்றிய சிந்தனை - இதனை மனதில் வைத்து செயல்பட்டாலே போதும் அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும். 

"நான் குடிகாரன்! என்னால் எதுவும் ஆகாது!" என்கிற மனநிலையிலிருந்து மீள வேண்டும்.  என்னாலும் முடியும் என்பதை  சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்! 

நம்மாலும் முடியும்!

No comments:

Post a Comment