மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். இது கொரோனா தொற்று நோயின் காலம்.
சோதனைகள் ஏராளம். வேதனைகள் ஏராளம்.
இந்த சோதனைகளும் வேதனைகளும் நமக்கு மட்டுமல்ல. உலகெங்கிலும் தான்.
இந்த சோதனையான நேரத்தில், பல வெளிநாடுகளில், ஏழைகள் வேறு வழியில்லாமல் எலிகளைத் தின்கின்றனர். பாம்புகளைத் தின்கின்றனர். தவளைகளைத் தின்கின்றனர். கைக்கு என்ன கிடைக்கிறதோ "புடி அதை" என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
இனி நாய், பூனைகள் கூட மனிதர்களைப் பார்த்து ஓடி ஒளியலாம்! நமது நாட்டில்கூட, வெளிநாடுகளிலிருந்து வந்த, வியட்னாமியர், நாய் மாமிசம் சாப்பிடுகின்ற பழக்கம் உடையவர்கள் என்பதை நாம் அறிவோம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நாய்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தனவாம். இப்போது அவர்கள் அதனை செய்யத் துணியவில்லை! கட்டுக்குள் இருக்கின்றனர்!
நம் நாட்டில் அப்படி ஒரு நிலை வராது என நம்பலாம். ஆனால் அதற்கான முயற்சிகளை இப்போதே நாம் எடுக்க வேண்டும். இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவோர் நமது இனத்தவராகத் தான் இருக்க முடியும்.
அதற்காகத்தான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவரா தள்ளிப் போடுங்கள் அந்த குடிப்பழக்கத்தை! இன்று உள்ள உங்கள் குடிகார நண்பன் நாளையே தொற்றுநோயால் தொற்றிக் கொண்டுப் போய் விடலாம்! நீங்கள் ஏன் அந்த அபாயத்தை வருவித்துக் கொள்ளுகிறீர்கள்?
வேண்டாம்! அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்கள் உடல் நலம் முக்கியம். உங்கள் குடும்ப நலன் முக்கியம். உங்கள் குழந்தைகள் சாப்பிட வேண்டும். அது முக்கியம். உங்கள் பெற்றோர்கள் சாப்பிட வேண்டும். அது முக்கியம். உங்கள் பிள்ளைகள் பள்ளி போக வேண்டும். அது முக்கியம். அவர்கள் உடல் நலனைக் கவனிக்க வேண்டும். அது முக்கியம்.
உங்களுக்கு நிறைய முக்கியங்கள் உள்ளன. நிறைய பொறுப்புகள் உள்ளன. மற்றவர்கள் சாப்பிடும்போது உங்கள் பிள்ளைகள் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் அப்படி பட்டினிக் கிடந்தால் அதற்குப் பொறுப்பாளி நீங்கள் மட்டும் தான். வேறு யாருமில்லை!
உங்கள் பொறுப்பை நீங்கள் அலட்சியம்செய்ய வேண்டாம். வேதனைகள் வரலாம். சோதனைகள் வரலாம். எல்லாவற்றையுமே நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும்!
சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுங்கள்! நம்மாலும் முடியும்!
No comments:
Post a Comment