Thursday 8 October 2020

இடைத் தேர்தல் வேண்டாமே!

 மீண்டும் ஒர் இடைத் தேர்தல் வருவதற்கான  கட்டாயம் வந்துவிட்டது!

எங்கிருந்து  மூன்றாம் அலை கொரோனா தொற்று,  மேற்கு மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதோ அதே சபாவில் இப்போது ஒரு நாடாளுமன்ற தொகுதி காலியாயிருக்கிறது. 

பத்து சாப்பி,  வாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர், லியு வூய் கியோங் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் 60 நாள்களுக்குள் தேர்தல் நடந்தாக வேண்டும் என்பது தேர்தல் விதி. அவர் கடந்த 2-ம் ததி அக்டோபர் மாதம் காலமானார்.

சட்டப்படி என்று சொல்லும் போது அந்த இடைத் தேர்தல் நடந்தாக வேண்டும்.  ஆனால் நாட்டின் சூழல் சரியாக இல்லை. கொரோனா தொற்று பரவுகின்ற வேகத்தைப் பார்க்கின்ற போது சட்டத்தை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை! 

சட்டம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ தேர்தலை நடத்த முடியாது என்பது தான் யதார்த்தம். அப்படியே நடக்க வேண்டும் என்றால் இங்கிருந்து அங்குப் போவதும், அங்கிருந்து இங்கு வருவதும் துண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் அல்ல. அங்கு சபாவிலும் அதே நிலைமை தான்!  அங்கேயும் போக்குவருத்துகள் தடை செய்யப்பட வேண்டும்!

தேர்தல் கூட்டங்கள் போடுவதற்கு வழியில்லை. அரசியல்வாதிகள் சுற்றுவதை நிறுத்த வேண்டும். பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது! இவைகள் எல்லாம் சமீபத்தில் நடந்தேறிய சட்டமன்ற தேர்தலிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு தேர்தலா? வேண்டவே வேண்டாம் என்பது தான் நமது ஒருமித்த குரல்.   "பட்டது போது பகவானே!"  என்று சொல்லத் தோன்றுகிறது! 

சமீபத்தில் அம்னோ இளைஞர் தலைவர் கூட "அங்கு தேர்தல் வேண்டாம்   அது வாரிசான் தொகுதியாகவே இருக்கட்டும்!" என்று கூறியிருக்கிறார்.  நாம் கொஞ்சம் வித்தியாசப்படுகிறோம்.  வாரிசான் தொகுதியாகவே இருக்கட்டும் என்றால் அந்த தொகுதியில் பிரதிநிதித்துவம் இருக்காது என்பது பொருள். நாம் சொல்லுவது: வாரிசானின் தலைவரோ, செயலாளரோ அல்லது யாரோ ஒரு வாரிசான் பிரதிநிதி, தேர்தல் இன்றி,  அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக  தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அது தான் முறையான பிரதிநிதித்துவம் அந்த மக்களுக்குக் கிடைக்கும்.

தேர்தல் வேண்டாம் என்பதே நமது நிலை! தேவைப்பட்டால் சட்டத்தை மீறலாம்! மக்களின் உயிரே முக்கியம்! சட்டம் அல்ல!

No comments:

Post a Comment