Monday 12 October 2020

நாளை விடியுமா? முடியுமா!

 நாளை (13.10.2020) பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பேரரசரை சந்திக்கவிருக்கிறார். 

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று சொன்னாலும் பேரரசரின் நிலை என்ன என்பதை நாம் அறியவில்லை. 

அவருக்கென்று சில சட்டதிட்டங்கள் உள்ளன. நல்லது கெட்டது என்று பலவற்றை ஆராய வேண்டிய சூழ்நிலையில் அவர் இருக்கிறார்.

இது அரசியல். அரசியலில் எவன் காலை வாறுவான், எவன் தலையை மொட்டையடிப்பான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது!  "ஆதரிக்கிறேன்!"  என்று வருபவன் பதவி கொடுக்காவிட்டால் "போதிக்கிறேன்!" என்று புறமுதுகைக் காட்டுவான்!  

ஆனால் அன்வாரின் நிலை எப்படியோ நமக்குத் தெரியாது!

 திறமையாளர் என்கிற பெயர் அவருக்குண்டு.  திறமையான நிர்வாகி என்கிற பெயர் அவருக்குண்டு. அத்தோடு நேர்மையான குணம், பக்திமான் - என்றும் சொல்லலாம். இப்போது பதவியில் இருப்பவர்களில் பலர் சும்மா ஒப்புக்குச் சப்பாணிகள்! ஆனால் கொள்ளையடிப்பதில் சப்பி எடுக்கும் ஒட்டுண்ணிகள்!

என்ன தான் திறமைகள் இருந்தாலும் அரசியல் என்று வரும் போது அனைத்தும் அடிபட்டுப் போகும்! அரசியலில் பார்க்கப்படுவதெல்லாம் "எனக்கு என்ன கிடைக்கும்!" என்கிற ஒரே மந்திர வார்த்தை தான்!

முதலில் அன்வார் ஆட்சி அமைக்க பேரரசரின் அனுமதி வேண்டும். 

அப்படியே அனுமதி கிடைத்துவிட்டால் அதன் பின்னர் தான் முதுகில் குத்தும் நாடகம் நடக்கும்! 

ஒன்றுமட்டும் எனக்குத் தெரியும். பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர் வல்லவர்.  அசராத மனிதர். மற்றவர்கள் அவரின் சொல்லுக்குக் கட்டுப்படுகின்ற சூழல் உண்டு. அவரால் எவரையும் சமாளிக்க முடியும்.

பிரதமர் பதவிக்கு ஏற்ற மனிதர் என்றால் அது அன்வார் தான். இதில் எந்த குழப்பமும் இல்லை.

நாளை விடியுமா என்று கேட்டால் "விடியும்!" என்றே அழுத்தமாகச் சொல்லலாம்! விடிய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

ஆட்சி நல்லவர்கள் கைக்கு வர வேண்டும். அதனைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம். கண்டவர்கள் கையில் அகப்பட்டு நாடு நாசமாகப் போவதை யாரும் விரும்பமாட்டார்கள்! 

அப்படி ஒரு நிலை நமக்கு வேண்டாம்!

No comments:

Post a Comment