Friday 23 October 2020

நம்மாலும் முடியும் (3)

 கொரோனா தொற்று நோய் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இத்தனை ஆண்டு காலம் வயிற்றை நிரப்பினோமே தவிர புத்தியை நிரப்பவில்லை! 

புத்தியை நிரப்பாத காரணத்தினாலேயே இப்போது துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  நன்றாக வாழ்ந்த காலத்தில் நாம் எதனை முக்கியமாக நினைத்தோம்?  எதுவுமே முக்கியமாக நமக்குத் தோன்றவில்லை!  

எல்லாவற்றுக்குமே போட்டா போட்டி.   வீட்டில் கல்யாணம் என்றால் கையிலிருக்கும்  காசு,  அம்மாவின் சேமநிதியில் உள்ள காசு  - எதனையுமே விட்டு வைப்பதில்லை! எல்லாவற்றையுமே வழித்தெடுத்துக் கல்யாணத்திற்குச் செலவு செய்வது நமது வழக்கமாகிப் போய்விட்டது!  கல்யாணம் செய்யும் இளைஞனோ, இளைஞியோ வேலை செய்கின்ற காலத்தில் ஏன் தனது கல்யாணத்திற்காக ஒரு சேமிப்பை ஏற்படுத்திக் கொள்வதில்லை?

சிக்கனம் என்பதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்வதில்லை. தேவை இல்லாமல் காதுகுத்து என்று சொல்லி பணத்தைச் செலவு செய்கிறோம். பிறந்த நாள் என்று சொல்லி அதற்கும் பணத்தை - அளவுக்கு மீறி - வாரி  வாரி இறைக்கிறோம். நீங்கள் பிறந்த நாள் கொண்டாடவில்லை என்றால் இந்த உலகம் உருண்டு உருண்டு சுருண்டா போய்விடும்?  அதற்காக இந்த அளவு செலவு செய்ய வேண்டுமா என்பது தான் கேள்வி. ஏன் வீட்டுக்குள்ளயே, நாலு சுவற்றுக்கள்,  நமது உறவுகளுடன் கொண்டாடுவதில் என்ன தவறு?

இப்போது புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறோம். குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் அதற்கு ஒர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!  பணத்தைச் சேமிக்க வேண்டிய காலத்தில் சேமித்து வைக்கவில்லை என்றால் பிற்காலத்தில் கஷ்டப்படும் போது யாரும் உங்களுக்குப் பணம் கொடுத்து உதவப்போவதில்லை என்பதை மறக்கவே வேண்டாம்!

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இது கொரோனா காலம் மட்டும் அல்ல. இனிப்பு நீர், இருதயக்கோளாறு என்பது சாதாரணமாக எல்லாருக்கும் உள்ள நோயாக மாறிவிட்டது. அப்போது டாக்டர்கள் கௌரவமாக உங்களின் கைகளையோ, கால்களையோ வெட்டி எடுக்க வேண்டும் என்பார்கள்! அதற்குப் பின் உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது!

இந்த நேரத்தில் உலகமே உங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.  உங்கள் பணம் தான் உங்களுக்கு உதவும். மற்றவர்கள் உங்களுக்கு அனுதாபம் தான் தெரிவிப்பார்கள்! வேறு என்ன செய்யப் போகிறார்கள்?

வேலை செய்கின்ற காலத்தில் உங்கள் சேமிப்புக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். நீங்கள் பாடுப்பட்டு சம்பாதித்த பணத்தை குடித்து, கும்மாளமடித்து குப்பைத் தொட்டியில் கொட்டாதீர்கள்!

உங்களுடைய பணம் மட்டும் தான் உங்களுக்கு உதவும்! அதனைப் பிடித்து வையுங்கள்!  அது தான் உங்களுக்குக் கௌரவத்தைக் கொடுக்கும்!

No comments:

Post a Comment