Wednesday 21 October 2020

தூர நில்லுங்கள்!

 தீபாவளி வருகிறது. இன்னும் சில நாள்களே உள்ளன   

ஆனால் தீபாவளி என்பது ஒன்றும் அதிசயமல்ல.  ஒவ்வொரு ஆண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதே சமயத்தில் மூன்றாவது பெரிய இனம் என்னும் போது மற்ற பெரிய இரண்டு இனத்தை விட நம்மிடம் தான் ஆர்ப்பாட்டங்கள் அதிகம்!  அதாவது நாம் தீபாவளி கொண்டாடுகிறோம் என்பதை ஊரறிய, உலகறிய ரொம்பவும் அதிகமாக வெளிப்படுத்துபவர்கள் நாம் தான்!

சரி, அதை விடுவோம். இந்த ஆண்டு தீபாவளி என்பது தனியாக வரவில்லை. கூடவே கொரோனா தொற்று நோயும் கூடவே வந்திருக்கிறது! அதனால் எதனையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 

காரணம் நாம் கேளிக்கைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்பதெல்லாம் நமக்குச் சாதாரணமான விஷயம்.

ஏன் இந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் கூட  நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை! இப்போதும் அதே ஜாலி, அதே மப்பு மந்தாரம், அதே அட்டகாசம் - நாம் இன்னும் மாறவில்லை!

இதோ வருகிற வெள்ளிக்கிழமையிலிருந்து குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்களுக்கு இன்னும் அதிகமான தண்டனை காத்துக் கிடக்கிறது. மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று மட்டும் தான் சொல்ல முடியும். 

நம் இனத்தின் சாபக்கேடு என்றால் மதுவின் பிடியில் நாம் சிக்கி இருப்பது.  அதிலிருந்து நாம் விடுபட முடியவில்லை என்பது தான் உண்மை.

இப்போது, கொரோனா தொற்று நோயின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் நம் இனத்தவர் தான்.  சீனர்கள் பொருளாதார வலிமையினால் வேலை இல்லாப் பிரச்சனை என்பது அவரிடையே குறைவு. மலாய்க்காரர்கள் அரசாங்க வேலை என்பதால் அவர்களிடம் பணப்புழக்கம் நன்றாகவே இருக்கிறது. இந்தியர்கள் மட்டும் தான் அதிகப் பிரச்சனையை எதிர்நோக்குகிறார்கள். தனியார் நிறுவனங்களையே சார்ந்திருப்பதால் பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இந்தியர்கள் வேலை இழக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குடிப்பதையே முழு நேர தொழிலாக கொண்ட நம்மவர்கள் தான்!

கடைசியாக, குடிப்பதை நிறுத்துங்கள்! மதுவின் பிடியிலிருந்து விலகி நில்லுங்கள்! தீபாவாளியாக இருந்தால் என்ன?  சாராயம் இல்லாத தீபாவளியாக இருக்கட்டும்! குடித்துச் சிரழிய வேண்டாம்! பிள்ளைகளை நடுத்தெருவில் நிறுத்த வேண்டாம்!

தூர நில்லுங்கள்! குடியிலிருந்து தூர நில்லுங்கள்!

No comments:

Post a Comment