Saturday 17 October 2020

அரசியல் நிலவரம் எதனை நோக்கிப் போகிறது?

 நமது நாட்டின் அரசியலில் நிச்சயமற்ற சூழல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அரசியலில் நிலைத்தனமை இல்லை என்றால் எந்த ஓர் அரசாங்கமும் நாட்டைச் சரியான பாதையில் வழி நடத்த முடியாது என்பதை இப்போது கண்கூடாக பார்க்கிறோம்.

இன்றைய பிரதமர் முகைதீன் யாசின் ஒரு இக்கட்டான சூழலில் தான் நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.  போதுமான ஆதரவு இல்லாத சூழலில் வலுத்தவன் வைத்தது தான் சட்டம் என்கிற நிலையில் தான் நாடு போய்க் கொண்டிருக்கிறது.

இதுதான் சரியான தருணம் என்று எதிர்பார்த்திருந்த அம்னோ இப்போது குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது!  பயமுறுத்தல் நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 

இன்றைய அரசாங்கத்தில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சி என்றால் அது அம்னோ தான். அதனால் அவர்களது குரல் உயர்ந்திருக்கத் தான் செய்யும்!  ஆனால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பாஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுத்தது அம்னோவினருக்கு முகைதீன் மேல் சரியான காட்டம் இருக்கிறது.  இருக்கத்தான் செய்யும். 

ஆனால் ஆரம்பத்தில் முகைதீன் அம்னோ கட்சியினருக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்பதற்குக் காரணங்கள் உண்டு.  மக்களின் கருத்து என்பது அம்னோவுக்குச் சாதகமாக இல்லை என்பதும் ஒரு காரணம்.  

அம்னோவினரை "கொள்ளைக்காரர்கள்!" என்கிற அபிப்பிராயம் தாம் மக்களிடையே உண்டு. அது இன்னும் உண்டு!

அன்றைய நிலையில் கொஞ்சம் அடக்கமாக வாசித்தவர்கள் இப்போது "மக்கள் மறந்து விட்டார்கள்!"  என்பதாக நினைத்து பழையபடி தங்களது கைவரிசையைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

இப்போது அவர்களது தகுதிக்கு மீறி முக்கியமான பதவிகளை அடைய வேண்டுமென்று  ஆசைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்! துணைப்பிரதமர் பதவி என்பது ஒன்று. தங்களின் தலைவர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்று அவர்களது நோக்கமாக இருக்கிறது. அதற்காகத்தான் இப்போது என்னன்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்!

இப்போது முகைதீன் தலை உருண்டு கொண்டிருக்கிறது! அவர் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள யார் யாரோ கேட்பதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்!

அரசியல் நிலவரம் சரியாக இல்லை!  சீக்கிரம் சரியாகும் என நம்புவோம்!

No comments:

Post a Comment