Sunday 11 October 2020

என்ன அவசரம்?

 தைப்பூசத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் தைப்பூசம் இருக்குமா, இருக்காதா என்கிற விவாதம் நடத்த ஆரம்பித்து விட்டோம்!

 முடியுமா, முடியாதா என்பதற்குப் பல அளவுகோள்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் சிவப்பு மண்டலங்களில் எதுவும் நடக்காது என்பது நமக்குத் தெரியும். மற்ற இடங்களில் ஒரு சில நிகழ்வுகள் ஒரளவு கட்டுப்பாடுகளோடு நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாட்டில் எங்குமே முழுமையாக சமூக இடைவெளி என்பது அகற்றப்படவில்லை.  அப்படியென்றால் நாட்டில் எந்த இடமும் பாதுகாப்பான இடமாக இல்லை!

பத்துமலை என்பது சிவப்பு மண்டலத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. இருக்காது என நினைக்கிறேன். இப்போதும் கூட சுற்றுப்பயணிகள் அங்குப் போய் வரலாம்.  குறைவான பேர் என்பதால் பயப்பட ஒன்றுமில்லை.

ஆனால் விழா என்பது வேறு. இலட்சக்கணக்கில் போய் வருகின்ற ஒரு இடம்.  நாடெங்கிலும் உள்ள முருகன் ஆலயங்கள் பக்தர்களால் கூடுகின்ற ஓர் இடம். அதுவும் பிள்ளைக்குட்டிகள்  கூடுகின்ற ஓர் இடம். வயதானவர்கள் கூடுகின்ற ஓர் இடம். இப்போது கூட சிவப்பு மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்கப்படக் கூடாது என்கிற நிலை உள்ளது.

கோயில்கள் திறக்கப்பட வேண்டும் - அது பத்துமலை ஆகட்டும் அல்லது மற்ற வழிபாட்டுத் தளங்கள் ஆகட்டும் - நல்ல விஷயங்கள் தான்.  ஆனால் பக்தர்கள் எந்த காலத்தில் கட்டளைகளைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.  மனிதர்கள் கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை.  பக்தர்களும் மனிதர்கள் தானே!

ஆனால் பத்துமலை என்பது உலகப்புகழ் பெற்ற ஒரு திருத்தலம். மக்கள் கூட்டம் என்பது இலட்சக்கணக்கில்.  வெளிநாட்டுப் பயணிகள் எல்லாம் வருவார்கள். 

இந்த ஆண்டு வெளிநாடுகளிலிருந்து பகதர்கள் வர வாய்ப்பில்லை. உள்ளுரிலும் எல்லா இடங்களிலிருந்தும் பக்தர்கள் வர வாய்ப்பில்லை. ஆங்காங்கே கட்டுப்பாடுகள் உள்ளன. பல கட்டுப்பாடுகளினால் பக்தர்கள் கூட்டமும் குறைவாகவே இருக்கும்.

நடக்கும் என்றாலும் நடக்காது என்றாலும் முன்பு போன்று பக்தர்கள் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. காரணம் கொரோனா தொற்று  எப்போது போகும் என்கிற விவரம் யாரிடமும் இல்லை! முற்றிலும் ஒழியுமா என்பதும் தெரியவில்லை! 

தைப்பூசம் இருக்குமா இருக்காதா என்பது இப்போது தீர்மானிக்க முடியாது. ஜனவரி மாதத்தில் தான் ஓரளவு தெரிய வரும்.

அது வரையில் பொறுமை காக்க!

No comments:

Post a Comment