Tuesday 6 October 2020

வாக்காளர்களா? கிளைகளா?

 சமீபத்தில் ம.இ.கா. தலைவர் ஒருவர் ம.இ.கா.கிளைத் தலைவர்களுக்கு ஓர் அறிவுரையைக் கொடுத்துள்ளார்.

"கிளைகளை அமைப்பதில் மட்டும் எப்படி ஆர்வம் காட்டுகிறீர்களோ அதே போல கிளைகளில் உள்ள அங்கத்தினர்களை வாக்காளர்களாக பதியவும் ஆர்வம் காட்டுங்கள்" என்பதுதான் அவரின் செய்தி.

நல்ல செய்தி தான். ஒரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு கிளையிலும்  இருநூறு, முன்னூறு   என்று அங்கத்தினர்கள் இருந்தனர். அப்போது நாங்கள் வீடு வீடாகச் சென்று அவர்களை வாக்காளர்களாகச் சேர்த்தோம். அப்போது அந்த வசதி இருந்தது. இப்போது அந்தப் பணியைத் தேர்தல் ஆணையம் எடுத்துக் கொண்டது.

ஆனாலும் இப்போது ஐம்பது பேர் இருந்தால் ஒரு கிளையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.  அதிலும் அவர்களில் பெரும்பாலோர் நமது சொந்தங்கள், சுற்றங்கள். அதனால் பணி எளிது. தேவை எல்லாம் அவர்களைக் கண்காணித்து வாக்காளர்களாக பதிந்து விட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வளவு தான்!

நான் ஆதரிக்கும் எதிர்கட்சிகள் அந்த வேலையைச் சரியாகவே செய்கின்றன. ஆகட்டும் பார்க்கலாம் என்றிருப்பதில்லை! அது அவர்களின் கடமையாக எடுத்துக் கொண்டு செய்வார்கள்.

இந்த நேரத்தில் இந்த கருத்தைச் சொன்ன தலைவருக்கு எனது ஆலோசனை ஒன்று உண்டு. 

கிளைத் தலைவர்களுக்குச் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான்: "எந்த கிளைகள் தனது அங்கத்தினர்களை நூறு விழுக்காடு வாக்காளர்களாக பதிவு செய்யவில்லையோ அந்த கிளைகளின் பதிவுகள் ரத்து செய்யப்படும்!" என்று சொன்னால் போதும் அவனவன் விழுந்தடித்துக் கொண்டு தனது வேலைகளைச் செய்வான்!

என்ன செய்வது? அக்கறை காட்ட வேண்டியவர்கள் அக்கறை காட்டவில்லை என்பது தானே குற்றச்சாட்டு! இவர்கள் மட்டும் என்ன? நக்கீரன் பரம்பரையா!

எப்படியிருப்பினும் ம.இ.கா. கிளைகளுக்கு நல்லதொரு புத்திமதியைக் கொடுத்திருக்கிறார் தலைவர். நடக்க வேண்டியது நடக்க வேண்டும். சாக்கு போக்குகள் தேவை இல்லை!

நல்லது நடந்தால் சரி! கிளைகளை விட வாக்காளர்கள் தான் நாட்டுக்கு முக்கியம்! நடக்கும் என எதிர்பார்க்கிறோம்!

No comments:

Post a Comment