Thursday, 22 October 2020

நமக்கு அது நல்ல செய்தி அல்ல!

 பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைச் செய்தியினைப் படித்த போது  நமக்கு மகிழ்ச்சிதான்!

 ஆனால் இது போன்ற செய்திகளை நம்மால் உறுதியாக நம்புவதற்கில்லை. சொல்லுவதொன்று செய்வதொன்று என்கிற ரீதியில் தான் விடுதலைப்புலிகள் மீதான செய்திகள் வருகின்றன.

ஆனாலும் இந்த செய்தியை நம்புவோம். நல்ல செய்தியாகவே இருக்கட்டும்!

இந்த நேரத்தில் கொஞ்சம் நமது பக்கம் திரும்புவோம்.

நமது அரசாங்கத்தின் நிலை என்னவாக இருக்கும்? அவர்கள் விடுதலைப்புலிகளைப் பற்றி என்ன செய்திகள் வந்தாலும், எந்த நாட்டிலிருந்து வந்தாலும் நமது காவல்துறை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!  அப்படி ஒரு கொள்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள்!

எந்த நாடுகள் தடை நீக்கம் செய்திருக்கின்றன என்பது பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை! எந்த நாடுகள் இன்னும் தடை நீக்கம் செய்யவில்லை என்பதைத் தான் அவர்கள் தங்களது வரவாக வைத்துக் கொள்வார்கள்!  அந்த நாடுகளின் செய்திகளுக்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்!

ஏன் நமது காவல்துறையினர் இப்படி ஒரு நிலையை இன்னும் சுமந்து கொண்டுத் திரிகிறார்கள்? 

காரணமாகத்தான்!   சென்ற ஆண்டு காவல்துறை "விடுதலைப்புலி ஆதரவாளர்கள்!" என்று சொல்லி ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது!  அவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது இந்த உலகத்திற்கே தெரியும்! அது காவல்துறைக்கும் தெரியும்! ஆனால் அவர்களைச் சிறையில் அடைத்து ஏதோ  பயங்கரவாதிகளைப் போல அவர்களை நடத்தினார்கள்! கடைசியில் ஏதோ உப்புச்சப்பற்ற காரணங்களைக் கூறினார்கள்! அவர்களின் விடுதலைப்புலிகளின் தலைவர்களின் படங்களை வைத்திருந்தார்களாம்!  இப்படியும் ஒரு காவல்துறை இங்கு உண்டு என்பதை உலகத்திற்குக் காட்டிவிட்டார்கள்!

எப்படியோ நமது நாட்டில் இது போன்ற சட்டங்கள் நீக்கப்படுவதற்கு வழியில்லை! அவ்வப்போது தமிழ் அரசியல்வாதிகளை, ஈழத்தமிழர்களின் அனுதாபிகளை மாட்டிவிட அரசாங்கத்திற்குத் தேவையாக இருக்கின்றன!

நமக்கு அது மகிழ்ச்சியான செய்தி அல்ல!

No comments:

Post a Comment