Tuesday 13 October 2020

கெரில்லா தோட்டம் - பழைய நினைவுகள்

 கிளந்தான், கெரில்லா தோட்டத்தைப் பற்றி நாளிதழில் படித்த போது மனம் கன கனத்தது.

நான்கு தலைமுறைகளாக அந்த தோட்டத்தில் வாழுகின்ற வயதானவர்கள் என்ன தான் செய்வார்கள்? "நமது தோட்டம்" என்கிற உரிமையோடு வாழ்ந்துவிட்ட அந்த மக்களை வெளியேறச் சொல்வதில் நியாயம் இல்லை தான்.  ஆனால் அது தானே யதார்த்தம்?  நமது மக்கள் வாழ்ந்த தோட்டங்களில் எல்லாம் இதே பிரச்சனையைத் தான் எதிர்நோக்கினார்கள். நமக்குப் பின் வந்த சீனர்கள் தோட்டங்களைச் சுற்றி இருந்த அரசாங்க நிலங்கள்,  ரயில்வே நிலங்களைப் பிடித்துக் கொண்டார்கள்!  நாம் தோட்டங்களைச் சொந்தம் கொண்டாடி அப்படியே தங்கிவிட்டோம்! யாரை நொந்து கொள்வது?

இந்த கெரில்லா தோட்டம் என்பது கொஞ்சம் வித்தியாசமான தோட்டம்.  நான் சில காலம் கிளந்தானில் வேலை செய்தவன்.  அந்த தோட்டத்திற்கு நான் போக விரும்பவில்லை. ஒரே காரணம் அந்த தோட்டம் ஒரு தீவில் அமைந்திருந்தது.  அப்போது அதைத் தீவு என்று தான் சொல்லுவார்கள்.  போக்குவரத்து என்றால் அங்குப் போக படகு பயணம்  மட்டும் தான்.  வாகனங்களைப் பயன்படுத்த முடியாது.

கிளந்தானில் இந்தியர்களைக் கணக்கெடுக்க வேண்டுமென்றால்  அந்த ஒரு தோட்டமே போதும்!  அந்த தோட்டம் தான் இந்தியர்கள் வாழுகின்ற இடம். கிளந்தானில் மற்ற இடங்களில் ஒரு சில இந்தியர்கள்  தான் வாழ்ந்து வந்தார்கள்.

அங்குத் தமிழ்ப்பள்ளி உண்டு.   என்னோடு படித்த ஒரு நண்பர் அங்கு ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.  அந்த காலத்தில் வெள்ளைக்காரர்கள் அந்த தோட்டத்தை நிர்வகிக்க நேரடியாக இங்கிலாந்திலிருந்தே செயல்பட்டர்களாம்!  காரணம் அங்கு வேலை செய்ய யாரும் முன்வரவில்லையாம்!

அந்த தோட்டத்தைப் பூர்விகமாக கொண்ட ஒரு தம்பதியினரை எனக்குத் தெரியும்.  அவர்கள் சொன்ன ஒரு வரலாறு.  அந்த தோட்டத்தில்  ஆரம்பகாலத்தில் தமிழ் நாட்டிலிருந்து ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைத்  தான் வேலை செய்வதற்காகக் கூட்டி வந்தார்களாம்.  அவர்களின் சந்ததியினர் தான் தொடர்ந்து அங்கு வேலை செய்து வருகின்றனர். வெளியே உள்ளவர்கள் அங்கு யாரும் போவதில்லை. உள்ளே உள்ளவர்கள் யாரும் வெளியே போவதில்லை! அப்படியே அவர்கள் பழகிவிட்டனர்.

ஆனால் இன்றைய நிலையில் எல்லாம் மாறிவிட்டன.  இப்போது போக்குவரத்துகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இப்போது தாராளமாக அவ்ர்கள் வெளியே செல்லலாம்.  போய் வேலை செய்யலாம். 

இதற்கு மேல் தெரிய வேண்டுமானால் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தான் சரியான மனிதர்.

இந்த வயதான தொழிலாளர்களுக்காக நாம் அனுதாபப்படுகிறோம். நல்லது நடக்க  இவர்களுக்காக பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment