நீங்கள் மது அருந்தினால் தான் கார் ஓட்ட முடியும் என்கிற மனநிலையில் உள்ளவரா?
உங்களுக்குத் தான் இந்த எச்சரிக்கை!
முடியவே முடியாது என்று நினைப்பவர்களுக்குத் தேவை எல்லாம் கொஞ்சம் விளையாட்டாக கொஞ்சம் பிரம்படி, கொஞ்ச நாள் சிறை, கொஞ்சம் பண விரயம், கெஞ்சல், கொஞ்சல் எல்லாமே உண்டு! அத்தோடு உரிமமும் பறி போகின்ற நிலைமை!
உங்கள் வீட்டில் இருந்து கொண்டு எதனை வேண்டுமானாலும் செய்யுங்கள். மதுவிலேயே நீச்சல் அடியுங்கள்! கார் ஒட்டுங்கள்!
சாலைகளில் உங்கள் வீரத்தைக் காட்டாதீர்கள்! அது பொதுமக்கள் பயன்படுத்துகின்ற இடம். கார்களை இடித்துத் தள்ளுவது, கார்களை நொறுக்கித் தள்ளுவது, மோட்டார் சைக்கிள்களில் செல்லுபவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது, பாதசாரிகளுக்கு மரணம் விளைவிப்பது - இப்படி மரண சம்பவங்கள் குறைந்தபாடில்லை! அதிகரித்துக் கொண்டே போகிறது!
இவைகள் எல்லாம் மது அருந்திவிட்டு கார் ஓட்டுபவர்கள், லோரி ஓட்டுனர்கள் இவர்கள் செய்கின்ற பாதகச் செயல்கள்!
இருக்கின்ற நடப்பு அரசாங்க சட்டங்கள் எதுவும் இவர்களுக்கு உரைக்கவில்லை! உரைத்திருந்தால் இப்படி தொடர்ச்சியாக விபத்துகள் வர வாய்ப்பில்லை!
இப்போது திருத்தம் செய்த புதிய சட்டம் என்ன சொல்லுகிறது? இது எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுடையதாய் இருக்கும்?
அபராதத் தொகை பத்தாயிரம் வெள்ளியிலிருந்து முப்பதனாயிரம் வெள்ளி வரை, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறைத் தண்டனை, வாகனம் ஓட்டும் உரிமம் இரண்டு ஆண்டு காலம் அல்லது மேலும் பறிக்கப்படும் அபாயத்தையும் இவர்கள் எதிர் நோக்குவார்கள்.
இவைகளெல்லாம் மேம்போக்காக நமக்குத் தெரிந்தவை. எல்லாருக்கும் இப்படித் தான் தண்டனைக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பழைய சட்டம் கூட அபாயகரமாக கார் ஓட்டி மரணம் சம்பவித்திருந்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இப்போதும் அந்த சட்டங்கள் அல்லது திருத்தப்பட்ட சட்டங்கள் தொடரத்தான் செய்யும்.
மது அருந்துவதே தவறு, அதுவும் மது அருந்திவிட்டு கார், லோரி, மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுவது பெரும் தவறு.
இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்குத் தான் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டத்திருத்தம்.
மதுவும்வேண்டாம்! குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டவும் வேண்டாம்! பொறுப்பற்றத் தனமும் வேண்டாம்!
No comments:
Post a Comment