Saturday 17 October 2020

என்ன தான் வேண்டும்?

 அம்னோ கட்சியினருக்கு இப்போது என்ன தான் தேவை?

உண்மையைச் சொன்னால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். அரசாங்கம் பாரிசான் கட்சியின் கீழ் வரவேண்டும். இதுதான் அவர்களது குறிக்கோள்.

இந்த குறிக்கோளை அடைய அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் கீழ் அரசாங்கம் அமைப்பது அவர்களுக்கு மிக மிக அவசிய-அவசரத் தேவை! 

இப்போது இருக்கிற சூழல் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. தொடர்ந்தாற் போல இடைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் அது ஒன்றே போதும் அனைத்தும் சாதகமாக இருப்பதாக அவர்களது கணிப்பு.

இப்போது உடனடியாக அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம். ஆனால் கொரோனா தொற்று அவர்களுக்கு இடைஞ்சலாக அமைந்துவிட்டது. அதுவே இன்றைய பிரதமருக்குச் சாதகமாகிவிட்டது!

இப்போதைய நிலைமைக்கு பிரதமர் மொகிதீன் மட்டுமே அம்னோவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்!  இன்னொறு முட்டுக்கட்டையும் அம்னோ சந்தித்தாக வேண்டும். அவர் தான் அன்வார் இப்ராகிம்.

முதலில் அவர்கள் ஒழித்துக்கட்ட வேண்டியவர்  மொகிதீன்.  அதனால் தான் 'நாங்கள் அன்வாரை ஆதரிக்கிறோம்!" என்று சொல்லித் திரிகின்றனர்.! முதலில் முதலாமவரை ஒழித்துவிட்டால் அடுத்தக்கட்ட நகர்வு அன்வாரை நோக்கி இருக்கும்! 

அம்னோவின் நோக்கம் எல்லாம் தேர்தல் மட்டும் தான்!  கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டால் அடுத்து அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு அடுத்த தேர்தல் நடத்த வேண்டும் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள்!

பிரதமர் மொகிதீன் நிலை நமக்குப் புரிகிறது. மிகவும் பலவீனமான அரசாங்கத்தை அவர் கொண்டிருக்கிறார். ஆனால் அன்வார் அப்படி அரசாங்கத்தை அமைத்தால் அவருடைய நிலைமை எப்படி இருக்கும்?  அவரும் பலவீனமான அரசாங்கத்தைத் தான் கொண்டிருப்பரா?  காலை வாரிவிட ஆட்கள் இருப்பார்களே! அது மட்டும் அல்ல. அம்னோவிடம் பொருளாதார சக்தி என்பது அதிகம்.  யாரை வேண்டுமானாலும் கவிழ்க்கக் கூடிய சக்தி அதிகம். பணத்தைக் கொடுத்து யாரையும் இழுத்து விடுவார்கள்! 

அது சரி! அம்னோவுக்கு என்ன தான் வேண்டும்?  அவர்களுக்கு அரசாங்கம் வேண்டும்! பதவி வேண்டும்! தங்கள் மீதூள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் முற்றிலுமாக மறைக்கப்பட வேண்டும்! அவர்களுக்குத் தோதானவர்களைப் பதவிக்குக் கொண்டு வரவேண்டும்!

அரசியல் என்பது மிகவும் அதிகாரமிக்கது!  எதையும் செய்யலாம்! எதனையும் செய்யலாம்!  ஓட்டாண்டியை உலக மகா ஊழல்வாதி எனலாம்! ஊழல்வாதியை உலக மகா உத்தமன் எனலாம்!

அதனால் நல்லவர்கள் நாட்டை வழி நடத்தவேண்டும் என்பதே நமது பிரார்த்தனை!

 

No comments:

Post a Comment