இப்போது நமக்கு ஒரு கேள்வி. அது கொஞ்சம் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது!
அம்னோ முதியவர்கள் உடனே தேர்தல் வைக்க வேண்டும் என்று பிரதமர் முகைதீனிடம் கூப்பாடு போடுகின்றனர். அது ஒரு பக்கம்.
அம்னோ இளைஞர்கள், பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவி ஏற்பதை தள்ளிப்போட வேண்டும் என்று அறிக்கை விடுகின்றனர். இது ஒரு பக்கம்.
இப்போது அம்னோவின் நிலைப்பாடு என்ன?
தீடீர் தேர்தல் வேண்டுமா, வேண்டாமா? இது ஒரு கேள்வி. தேர்தல் வேண்டாம் என்று சொல்லுவதற்குக் கொஞ்சம் வலுவான காரணங்கள் உண்டு. அது கடவுள் மேல் உள்ள பயம் என்று சொல்லி விட முடியாது. கொரோனாவின் மேல் உள்ள பயம்! இன்று மனிதர்களுக்குக் கொரோனாவின் மேல் உள்ள பயம் போன்று வேறு யாரிடமும் கிடையாது!
தீடீர் தேர்தல் வைத்தால் பிரச்சாரம் செய்ய இயலாது. நாடெங்கும் சுற்றி வர முடியாது. மேலும் கொரோனா தொற்று மூலம் எத்தனை பேர் மருத்துவமனையில் சுருண்டு கிடப்பார்களோ! எத்தனை பேர் போய்ச் சேர்வார்களோ! தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆள் கிடைக்குமா என்கிற பயம் வேறு! இப்படித்தான் அம்னோ பெருந்தலைகள் சிந்திக்கின்றனர்1
இவ்வளவுக்கும் காரணம் சபா மாநிலத் தேர்தல். சின்னப் பிள்ளைகள் என்றால் "சொன்னப் பேச்சைக் கேட்கவில்லை!" என்று காதைப் பிடித்து திருகலாம்! இவர்களை என்ன செய்ய முடியும்! வளர்ந்து விட்ட பிள்ளைகள்! கோடி கோடியாய் கொள்ளையடித்து வளர்ந்து விட்ட பிள்ளைகள்! இன்னும் ஆசை அடங்கவில்லை! அதனால் தான் இந்த சபா தேர்தல்!
அம்னோ இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் ஒன்றும் நினைக்கவில்லை. பெரியவர்கள் செய்ய முடியாததை இவர்கள் மூலம் செய்ய நினைக்கிறார்கள். அவ்வளவு தான்! அன்வார் இப்ராகிமை இப்போது பதவி ஏற்க வேண்டாம் என்கிறார்கள். பதவி ஏற்றால் அவர்களுடைய கோட்டைகள் அனைத்தும் சரிந்து விடும்! பதவி ஏற்காமல் இன்னும் சில மாதங்கள் அல்லது இன்னும் சில வாரங்கள் இழுத்தடித்தால் அதற்குள் அவர்கள் சுதாகரித்துக் கொள்வார்கள்! தேர்தல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்! எல்லாமே சுயநலம் தான்! என்ன செய்வது? அது தான் அரசியல்!
இப்போது யார் சொல்லுவதை ஏற்றுக் கொள்வது? தேர்தல் வேண்டாம். காரணம் கொரோனா தொற்று நம்மைச் சுற்றி வருகிறது! அம்னோ சொல்வது சரி. புத்ரா ஜெயா கைப்பற்றுவதை அன்வார் ஒத்தி வைக்க வேண்டும். அம்னோ இளைஞர் சொல்வது சரியல்ல. அது ஒன்றும் மேடை போட்டு, கனல் தெறிக்க பேச ஒன்றுமில்லை. அமைதியாக உள் அரங்கத்தில் செய்யப்படுகின்ற சில சாங்கியங்கள்.
பிரதமர் மாற்றம் நிகழ வேண்டும்! அதுவே சரி!
No comments:
Post a Comment