Monday 26 October 2020

அவசரகாலம் தேவை இல்லை!

 அவசரகாலம் தேவையற்றது என்பதாக மாட்சிமை தங்கிய பேரரசரின் அறிவிப்பினால் நமக்கும் கொஞ்சம் நிம்மதி. 

ஒரு தனி மனிதர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதும். வேறு சான்று தேவை இல்லை!

அரசியல்வாதிக்குப் பதவி தான்  முக்கியம்.   முடிந்தவரை பிரதமர் முகைதீன் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு உபாயங்களையும் பல்வேறு அபாயங்களையும் சந்தித்து வருகிறார்!

கொரோனா தொற்று பிரதமருக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்!  இதைத்தான் "ஒருவனின் துன்பம் இன்னொருவரின் இன்பம்!"  என்பார்கள்! கொரோனாவை வைத்தே இத்தனை மாதம் தனது ஆட்சியை நீட்டித்திருக்கிறார்  என்றால் அது ஒரு பெரிய சாதனை தான்.  ஆனாலும் அதனையே  அவசரகாலத்திற்கும் உதவும் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார். 

ஆனால் பேரரசரின் தலையீடு இல்லை என்றால் கொரோனாவைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்தியிருப்பார், முகைதீன்! அது தான் அரசியல்! முடியாததையும் முடித்துக் காட்ட முடியும்!  ஆனால் மக்களுக்கு நல்லதைச் செய்ய மட்டும் ரொம்பவும் கணக்குப் பார்ப்பவர்கள் அரசியல்வாதிகள்!

அடுத்தக்கட்ட பிரதமரின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?  முதல் அவசரகாலத் தோல்வி  என்பது மக்களின் வெற்றி! அடுத்து விரைவில் நாடாளுமன்றம் கூடுகிறது.  முன்பு எதிர்த்தவர்களை எல்லாம் இப்போது தனது பக்கம் இழுத்து வைத்துக்கொண்டு எதிர்பார்த்ததை விட தனது வலிமையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்!

அரசாங்கம் கவிழுமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.  அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு என்ன செய்வதாம்? முன்பு "அன்வாரை ஆதரிக்கிறோம்!"  என்று சொன்னவர்கள்  இப்போது "அள்ளித்தருபவரை ஆதரிக்கிறோம்!:" என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள்!

அப்படியே அரசாங்கம் கவிழ்ந்தாலும் தேர்தலை நடத்துவது என்பது கொரோனாவின் தயவைப் பொறுத்தது! 

இப்போதே நாம் ஏறைக்குறைய ஒரு முடிவுக்கு வரலாம்.  நம் ஊருக்குத் திடீர் தேர்தல் வராது.  அடுத்த தேர்தல் வரும் வரை கொரோனா தொடரும் என நம்பலாம்! அரசியல்வாதிகள் அவ்வளவு சீக்கிரத்தில் அந்தத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரமட்டார்கள் என எந்தவிதமான கூச்சநாச்சமின்றி நம்பலாம்!

சபா மாநிலத்திலிருந்து பொது மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காமல் இங்கு இறக்குமதி செய்தவர்களே அரசியல்வாதிகள் தான்! அவர்கள் பதவியில் இருப்பதற்காக எந்த  சதிநாச வேலைகளையும் செய்வார்கள் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்!

அதனால் அவசரகாலம் தேவை இல்லை என்பது  சரி.  அதே போல அரசாங்கம் கவிழாது என்பதும் சரி!

அரசாங்கம் கவிழ வேண்டாம்! அதே போல திடீர் தேர்தலும் வேண்டாம்!  அரசாங்கம் கவிழ வாய்ப்பில்லை என்பதால் தான் இப்போது பலர் முகைதீனை ஆதரிக்கின்றனர்.

கவிழ்ந்தால் நாட்டைக் காப்பாற்ற கொரோனா உண்டு!

No comments:

Post a Comment