Saturday 10 October 2020

தேசிய முன்னணியிடம் பேசுங்கள்!

 கெடா மந்திரி பெசாரிடமிருந்து ம.இ.கா.வுக்கு நல்லதொரு பதில் கிடைத்திருக்கிறது!

அது சரியா, தவறா என்பது பற்றி நான் இங்கு பேசவில்லை. 

மந்திரி பெசார் சொல்லுவது போல ம.இ.கா.வினருக்கு தேசிய முன்னணியிடம் பேசுகின்ற அளவுக்குத் துணிச்சல் இல்லை. அது முன்பும் இருந்ததில்லை! இனி மேலும் இருக்கப்போவதில்லை! 

பாஸ் அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததும் நடந்த முதல் நிகழ்ச்சி ஓர் இந்து கோயிலை உடைத்தது தான்.  அப்போது அனைவரும் "வால் வால்,  வீல் வீல்!"  என்று கத்தினோம்! 

ஆனால் இப்போது  மந்திரி பெசார், ம.இ.கா. வினருக்குக் கொடுத்த பதிலடியில் ஒன்று நமக்குப் புரிகிறது.  கோயில் உடைக்கப்பட்டதற்கு பாஸ் கட்சியினர் காரணம் அல்ல என்பது தான். 

அப்படியென்றால் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் தேசிய முன்னணியினர் தான்.  தேசிய முன்னணி என்றால் இப்போது நாம் யாரைக் குற்றம் சொல்லுவோம்? நிச்சயமாக அது ம.சீ.சா. வாக இருக்க முடியாது.  அம்னோ அல்லது ம.இ.கா. வாகத்தான் இருக்க முடியும்.

அம்னோ இப்படி செய்யுமா அல்லது ம.இ.கா. இப்படி செய்யுமா என்று பார்க்கும் போது ம.இ.கா. இப்படிச் செய்யாது என்று மேலோட்டமாக நாம் நினைத்தாலும் ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 

பாஸ் கட்சி மாநில ஆட்சிக்கு வரும் முன்னர் அந்த மாநிலம் பக்கத்தான் ஆட்சியில் இருந்தது.  அது ம.இ.கா. வினருக்கு வேண்டாத கட்சி. பக்காத்தான் எதிர்கட்சியினர் என்றாலும் அவர்கள் ஆட்சியில் அந்த குறிப்பிட்ட கோயில் உடைக்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.  ஆனால் பாஸ் கட்சியினர் பதவிக்கு வந்ததும் அது உடைக்கப்பட்டது.  பாஸ் அரசாங்கம் என்றாலும் அந்த அரசாங்கத்தில் ம.இ.கா.வினருக்கும் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ம.இ.கா.வினருக்கு அந்த கோயில் உடைப்பு பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுக்க முடியாது. அது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் முறையான பேச்சுவார்த்தை மூலம் அதனை தவிர்த்திருக்கலாம்.  அதனை அவர்கள் செய்யமாட்டார்கள்! செய்ய முடியாது! 

ஒரே காரணம் தான்.  அவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. நின்றாலும் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு இருப்பது ஒரே வழி தான். பட்டம், பதவி வேண்டுமென்றால் "ஆமாம்!" போட்டுக் கொண்டே போக வேண்டியது தான். அப்படி செய்தால் செனட்டர் பதவி கிடைக்கலாம், அரசு சார்ந்த அமைப்புக்களில் பதவிகள் கிடைக்கலாம்.

இது தான் நம்மைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொல்லுகின்ற ம.இ.கா. அரசியல்வாதிகளின் நிலை! 

மந்திரி பெசார் சொல்லுவது போல இவர்கள் தேசிய முன்னணியிடம் பேசுகின்ற அளவுக்கு இன்னும் அறிவில் வளரவில்லை!

No comments:

Post a Comment