Tuesday 27 October 2020

வயது ஒரு பொருட்டல்ல! (5)

 உடற்பயிற்சி செய்வதற்கு வயது ஒரு தடையா?

'ஆமாம்!"  என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். "வயதானப் பிறகு எந்தப் பயிற்சியைச் செய்வது?  பெரிய இரும்புகளை எல்லாம் தூக்கவா முடியும்? வயசாச்சி! சும்மா கிடந்தாவே போதும்! அதுவே பயிற்சி தான்!" என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள்1

சும்மா கிடந்தாவே பயிற்சியா? அப்படி என்றால் நினைத்த நேரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலே பயிற்சி தான்! 

அப்படி இல்லை,  நண்பர்களே!  வயதானவர்களுக்கென்று சில பயிற்சிகள் இருக்கின்றன. உங்களை யாரும் வெட்டி முறிக்கச் சொல்லவில்லை! சும்மா நடந்தாலே போதும் .  அது போதும் அதுவே பயிற்சி தான்!

டாக்டர்கள்,  ஒர் அரை மணி நேரம் நடங்கள் அது போதும். அதுவே பயிற்சி தான் என்கிறார்கள். 

நாம் செய்யாததற்குச் சாக்குப் போக்குகள் வழக்கம் போல  நிறையவே வைத்திருக்கிறோம். அதில் ஒன்று தான் "வயசாச்சி!" 

நான் வசிக்கும் தாமானில் ஒரு மலாய்க்காரப் பாட்டி ஒருவரைத் தெரியும். காலையில் தாமனைச் சுற்றி  சைக்கிளில்  வலம் வருவார். பல ஆண்டுகளாக அவர் இந்தப் பயிற்சியைச்  செய்து வருகிறார். 

அவருக்கு ஏறக்குறைய தொண்ணூறு வயதுக்கு மேல் இருக்க வேண்டும். முகம் சுருக்கம் விழுந்து, முதுகுக் கூன் விழுந்து ஆனாலும் பாட்டி அது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை! தனது கடமையைத் தவறாமல் தினசரி செய்து வருபவர்!

தீடீரென நேற்று பாட்டியைப் பார்த்த போது கொஞ்சம் ஏமாற்றம் தான்.  பாட்டியால் முழுமையாக சைக்கிளை ஓட்டிக் கொண்டு போக முடியவில்லை. சைக்கிளை ஓட்டிக்கொண்டு போவது, ஓட்ட முடியாத இடத்தில் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போவது  இப்படித் தான் அவர் இப்போதெல்லாம் செய்து கொண்டு வருகிறார். 

இருந்தாலும் பாட்டியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.  சைக்கிளை ஓட்டிக் கொண்டு போக முடியவில்லையா, உருட்டிக் கொண்டாவது போ என்கிற அந்தப் பாட்டியின் வைராக்கியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியுமா! ஆமாம், ஓட்டிக் கொண்டு போ! இல்லன்னா உருட்டிக் கொண்டு போ!  இன்னும்  இருக்கிறோம் என்பதற்கு அது தானேஅடையாளம்!

நாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் தான் என்ன? செயல்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.  அவ்வளவு தான்!

வயதான சீனர்கள் என்றாவது ஓய்ந்து, உட்கார்ந்து கிடந்ததைப் பார்க்க முடியுமா?  நாம் பின்பற்றுவதற்குச் சீனர்கள் சரியான உதாரணம்.

வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்!

No comments:

Post a Comment