காலையில் 'வணக்கம் மலேசியா" இணையத்தளத்தில் படித்த ஒரு செய்தி
ஆரம்பத்தில் படிக்கும் போது மனதிற்குக் கஷ்டமாக இருந்தாலும் கடைசியில் முடிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது1
கொரோனா தொற்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிற பாதிப்பு இனி பெரிய அளவில் வரும் என்றே தோன்றுகிறது.. மற்றவர்களை விட இந்தியர்களின் பாதிப்பு இன்னும் அதிகம் வரும் என்பது தான் சோகம்.
கார்கள் கழுவும் தொழிலில் ஈடுபட்டிருந்த நண்பர் ஒருவருக்கு, இருந்த தொழிலையும் இழந்ததால், தந்தையார் வைத்திருந்த ஒரு பாழடைந்த வீட்டில் அவரும் அவரது வேலை இழந்த மனைவியும் போக வேண்டிய கட்டாயம். ஆனால் மிகவும் பாழடைந்து போயிருந்ததால் அங்கும் தங்க இடமில்லாமல் கடைசியில் அவர்களுடைய புரோட்டோன் காரிலேயே கடந்த நான்கு மாதங்களாக தங்கி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
நன்றி: வணக்கம் மலேசியா P. Sivagamiselvan-J.Rajakumari
இவர்களின் இக்கட்டான பிரச்சனையை அறிந்த துவாலாங் செக்கா, சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நோலி அசிலின் முகமட் ரட்ஸி அவருடன் சேர்ந்து அரசாங்க சார்பற்ற இயக்கம் ஒன்று, பேராக் தீயணைப்பு மீட்புத்துறை அனைவரும் சேர்ந்து அந்த தம்பதியினருக்கு இரு அறைகள் கொண்ட வீடு ஒன்றைக் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றனர்.
அநேகமாக அந்த வீடு தீபாவளிக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டு அத்தம்பதியினர் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நேரத்தில் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நோலியைப் பாராட்டியே ஆக வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் ஒரு காரியத்தை முன்னெடுத்தால் அது தானாகவே நடைபெறும்.
எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் இவரைப் போலவே பிரச்சனைகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுத்தால் முடியாதது முடிந்து விடும்.
இந்த நேரத்தில் ஒதுங்குவதற்கு என்று ஒரு வீட்டை வைத்திருந்தாரே அந்த நண்பரின் தகப்பனார் அவர் பாராட்டுக்குரியவர். ஓட்டைக் குடிசையானாலும் சொந்தக் குடிசை அல்லவா!
தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். மதுவை விட்டுத் தூர நில்லுங்கள்! அதுவே நிரந்தர மகிழ்ச்சி!
No comments:
Post a Comment