Sunday 17 January 2021

இது தான் மலேசியா!

 


மலேசியர்கள் பரிவு மிக்கவர்கள் என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டு வருகிறது

நம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பவர்கள்  அரசியல்வாதிகள் தான்.

மலேசியர்களிடேயே ஒற்றுமையில்லை அதற்குக் காரணம் தாய்மொழிப்பள்ளிகள் அல்லது பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்று பேசி வருபவர்கள் அரசியல்வாதிகள்!

ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் கூட நல்லவர்கள் தான்.  மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நம்மை மனம் நெகிழ வைக்கிறது.

சீன பெரியவர் ஒருவர் தனது 32 வயது மகன் விபத்தொன்றில் இறந்து போனார் என்கிற செய்தி கேட்டு மலாக்கா மாநிலத்திலிருந்து  தெலுக் இந்தான், பேரா மாநிலத்திற்கு விரைந்திருக்கிறார். ஆனால் அங்கிருந்து இறந்துபோன  தனது மகனின் உடலை மலாக்கா கொண்டு வருவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது.

ஆமாம்,  அங்கிருந்து சவ வண்டியில் கொண்டு வர அவருக்கு ரி.ம. 1,600.00 வெள்ளி தேவைப்பட்டது.  ஆனால் அந்த அளவுப் பணம் அவரிடம் இல்லை.

அவர் பணத்துக்காக அலைமோதி கொண்டிருக்கையில்  மலாய் நண்பர் ஒருவர் இலவசமாக அவருக்கு உதவ முன் வந்தார். 

அவர் வைத்திருந்த, இஸ்லாமியர்களுக்கான சவ வண்டியை,  அந்த சீன பெரியவருக்குக் கொடுத்து  உதவ முன் வந்தார். இஸ்லாமியர் பயன்படுத்தும் சவ வண்டியை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த உடலுக்குப் பயன்படுத்தலாமா என்கிற கேள்வி எழுந்த போது அது பற்றி அவர் கவலைப்படவில்லை.

"கடவுளுக்குத் தான் நாம் பதில் சொல்ல வேண்டுமே தவிர மனிதனுக்கு அல்ல!"  என்பது தான் நமது பதிலாக இருக்கும்.

ஆபத்து, அவசர நேரத்தில் மனிதனுக்கு மனிதன் உதவுவதை யாரும் தவறாக நினப்பதில்லை. 

அந்த மலாய் நண்பர் சுமார் 300 கிலோ மீட்டர்  தூரம் இலவசமாக அந்த சீனருக்கு அவரின் மகனின் பிரேதத்தை மலாக்கா வரைக்  கொண்டு வர உதவியிருக்கிறார்.

இது தான் நமது பண்பு. இது தான் மனிதம் என்பது. அந்த மலாய் நண்பர் நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment