Saturday 16 January 2021

மீண்டும் ஒத்திவைப்பு!

 பள்ளிகள் திறப்பது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது!

அது மாணவர்களின் நலனுக்காகத்தான் என்று நமக்குப் புரியாமலில்லை. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நேற்று மட்டும் (16.1.2021) 4029 பேர் தொற்று நோயினால் பாதிப்பு  அடைந்திருக்கிறார்கள்.  இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவே அதிகம். 

குறைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்கிற சந்தேகம் இப்போது நமக்கு எழத்தான் செய்கிறது. 

அரசாங்கம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலுமா என்பதும்  உண்மையாகத் தெரியவில்லை!

இப்போது தான் ஒன்று நமக்குப் புரிகிறது.  அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்  ஓர் அரசாங்கம்  என்பது செயல்பட முடியாத ஓர் அரசாங்கம்  என்பதில் சந்தேகமில்லை.

ஆமாம்! அவர்களால் செயல்பட முடியவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்கிற பயம் அவர்களைச் செயல்பட முடியாதபடி செயலிழக்க வைக்கிறது!

பிரதமர் முகைதீனும் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை! முடிந்த வரையில் அடுத்த பொதுத் தேர்தல் வரை அவர் மல்லுக்கட்டுவார் என்பது தெரிகிறது!

இப்போது பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகவில்லை என்றால்  அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று சொல்லத்தான் வேண்டுமா? அவர்கள் கையில் கைப்பேசியை கொடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!

அது தவறு என்று தெரிந்தும் பெற்றோர்கள் அதைத்தான் செய்ய வேண்டியுள்ளது! அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியவில்லை. ஒரு சில பெற்றோர்கள் அதனையும் தெரிந்து வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துகிறோம்!

இனி பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கைப்பேசிகளைக் கொடுக்கும் முன்னரே அவர்கள் அதன் அத்தனை செல்பாடுகளையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்றே கருத வேண்டியிருக்கிறது.

பெற்றோர்களை விட பிள்ளைகள் இன்னும் அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்!  "என்னவிட என் பிள்ளைக்கு அதிகம் தெரியும்!" என்றெல்லாம் சொல்லி  அலட்சியமாக இருந்தால் பிள்ளைகள் தறுதலைகளாக மாறிவிடுவார்கள்!

எப்போது தான் இந்த "ஒத்திவைப்பு" நாடகம் ஒரு நிறுத்தத்திற்கு வரும்  என்று சொல்ல முடியவில்லை.

ஒரு பக்கம் தொற்று கூடிக்கொண்டே போகிறது.  இங்கு அரசாங்கத்தின் கையாலாகத்தனம் தெரிகிறது. இன்னொரு பக்கம் பெற்றோர்களின் "பிரஷர்"  ஏறிக் கொண்டே போகிறது.  இப்போதைக்கு இது எங்கே போய் முடியும் என்று கணிக்க முடியவில்லை!

ஒத்தி வைக்கலாம்! பொத்தி வைக்க முடியாது!

No comments:

Post a Comment