இன்றைய ஆளுங்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் இனப்பாகுபாடு காட்டுகிறதோ என்கிற ஒர் ஐயம் எழத்தான் செய்கிறது.
இந்தியர்களால் நடத்தப்படுகின்ற ஜவுளிக் கடைகளுக்கு மட்டும் ஏன் இந்தக் கதவடைப்பு என்று நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது ஒரு துரதிருஷ்டமே.
காரணம் இப்போது நாம் எங்கே வேண்டுமானாலும் போய் நமக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கலாம். சமீபத்தில் நான் கூட வாங்கியிருக்கிறேன். எல்லாமே பெரும் பெரும் பேரங்காடிகள். பெரிய புகழ்பெற்ற நிறுவனங்கள்.
இப்படி வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் அரசாங்கம் வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்திருக்கும் வேளையில் உள்நாட்டில் காலங்காலமாக வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜவுளி நிறுவனங்களுக்கு மட்டும் ஏன் இந்த கடுமையான கட்டுப்பாடு? அவர்களும் மனிதர்களே! அவர்களிடமும் பல ஆயிரம் பேர்கள் வேலை செய்கிறார்கள்! அவர்களை நம்பி பலாயிரம் குடும்பங்கள் ஜீவனம் நடத்துகின்றனர்.
ஒரு வேளை அவர்களை இந்தியர்கள் என்கிற ரீதியில் பார்க்கும் போது குறைவானவர்களாக இருக்கலாம். ஆனாலும் அவர்களும் மனிதர்கள். அவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அது தான் அவர்களின் வாழ்வாதாரம். புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.
சீன முதலாளிகளுக்குச் சார்பாக அரசாங்கம் இருக்கக் காரணம் சீனர்களுக்காக பரிந்து பேச ம.சீச. எப்போதும் தயாராக இருக்கிறது. இந்தியர்களுக்குப் பரிந்து பேச எந்த பிரதிநிதித்துவமும் இல்லை.
மலாய்க்காரர்கள் என்றால் எதுவும் தேவை இல்லை. முண்டியடித்துக் கொண்டு உதவ அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதனால் அவர்கள் பிரச்சனைகள் வெளி வரும் முன்பே அனைத்தும் தீர்க்கப்பட்டு விடுகின்றன.
ஆனால் இந்தியர்களின் பிரச்சனை எந்தக் காலத்திலும் தீர்க்கப்படுவதில்லை. யாரும் அது பற்றி பேசுவதில்லை. அதனால் தான் நமது குரலைக் கேட்க ஆளில்லாமல் தவிக்கிறோம்!
இன்றைய நிலையில் பார்க்கும் போது இது இனப்பாகுபாடு தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஜவுளி வியாபாரிகளின் கோரிக்கை கேட்கப்பட வேண்டும். அவர்களும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
எந்தவித மாற்றமுமில்லாமல் இந்தப் பிரச்சனை தொடரும் என்றால் அது இனப்பாகுபாடு தான்! ஐயமில்லை!
No comments:
Post a Comment