Sunday 31 January 2021

முடியுமா முடியாதா?

 கோவிட்-19 தொற்று நோய் அதிகமாக அதிகமாக நமக்கே அரசாங்கத்தின் மேல் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படத்தான் செய்யும். 

ஆனால் அதனால் என்ன பயன்.  நாம் சரியாக நடந்து கொள்கிறோமா என்பது தாம் முக்கியம். மக்கள் தங்களது கடமைகளைச் சரியாக செய்யவில்லை எனின் எந்த ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது.

மக்களைக் குறை சொல்லியும் புண்ணியமில்லை. அவர்களால் என்ன செய்ய முடியும்? ஏதோ ஓரிரண்டை நிறைவேற்றலாம் அவ்வளவு தான். அனைத்தையும் கடைப்பிடிக்க இயலாது.

ஓடி ஆடி விளையாடுகிற பிள்ளைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? பெரியவர்கள் ஏதோ ஓரளவு கேட்பார்கள். அவர்களும் "இனி மேல் முடியாதுடப்பா!" என்று முடிவு செய்தார்களானால்  அவர்களையும் கட்டுப்படுத்த முடியாது.

ஆனாலும் பெரும்பாலும் பார்க்கையில் மலேசியர்கள் பலர் முடிந்தவரை கட்டுப்பாடாகத்தான் இருக்கின்றனர்.

இதன் நடுவே ஒரு பகுதி மக்களை நாம் மறந்து விடுகிறோம். அவர்களும் நம் நடுவே இருக்கின்றனர். கொஞ்சம் ஒளிவு மறைவாக இருக்கின்றனர். முன்பு போல் தைரியமாக வெளி நடமாட்டம் இல்லாமல் இருக்கின்றனர். வேலைக்குப் போகின்றனர் வருகின்றனர்.

அவர்கள் தான் வெளி நாட்டுத் தொழிலாளர்கள். இவர்களைக் கட்டுப்படுத்தாத வரை நம்மால் இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

அவர்கள் வேலைக்குப் போகிறார்கள். அங்கேயும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதை விட அவர்கள் தங்கும் இடங்கள் தான் மிகவும் அபாயகரமானது. இரண்டு பேர் தங்க வேண்டிய இடத்தில் இருபது பேர் தங்குகின்றனர். சிக்கனம் கருதி அவர்களுக்கு அப்படி ஒரு நிலை.

யார் இவர்களை என்ன செய்ய முடியும்? பிழைப்பைத் தேடி வந்தவர்கள். அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் அவர்கள்  செய்வார்கள்.  அதற்கு மேல் அவர்களிடம் எதனை  எதிர்பார்க்க முடியும்?

தடுப்பூசி விவகாரத்தில் இவர்களுக்குத் தான் முதல் சலுகை கொடுக்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து அதற்கான பணம் வசூல் செய்தால் அதிலும் பிரச்சனை! அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்!

இன்றைய நிலையில் இவர்களைக் கட்டுப்படுத்த யாராலும் இயலாது! ஒரு பக்கம் அரசாங்கம் சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை மீண்டும் அவர்களை அவர்களின் நாட்டுக்கே அனுப்ப முயற்சி செய்கிறார்கள். 

இப்போது ஒரு விஷயத்தில் அரசாங்கம் தெளிவாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாக இருப்பவர்களா அல்லது கோவிட்-19 தொற்றா? இது தான் நம் முன்னே உள்ள கேள்வி.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தால் இவர்கள் அனைவரும் போய் பதுங்கிக் கொள்வார்கள்! அவர்களை அவ்வளவு எளிதாக அகப்படமாட்டார்கள்! இவர்கள் அகப்படாத வரை இந்த தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.

அரசாங்கம் எப்படி இவர்களைக் கையாளப் போகிறது என்பது முக்கியமான கேள்வி.  

தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமா முடியாதா என்றால் சட்டவிரோத தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முடியுமா முடியாதா என்பதையும் கேட்க வேண்டியுள்ளது!

முடியுமா முடியாதா என்றால் மு...டி....யா....து...! என்று சொல்ல வேண்டி இருக்கிறது!

No comments:

Post a Comment