Sunday 10 January 2021

தளபதியாரே! வேண்டாம் விபரீதம்!

 தளபதி விஜய் அவர்களே! வேண்டாம் இந்த விபரீதம்!  

திரைப்படங்களில் தளபதி! ஆனால் சொந்த வாழ்க்கையில் சுயநலப் பேர்வழி! வேண்டாம் இந்த வேடம்! 

 திரை அரங்குகள நூறு விழுக்காடு திறக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சரிடம்  அரங்குகளின் உரிமையாளர்களுக்காகவும், உங்களின் ஊதியத்திற்காகவும் போய் பேசி  அனுமதி வாங்கினீர்கள்.

இதில் ஜெயித்தவர் யார்? முதலமைச்சர் தான்! அவர் தன் மேல் குற்றமில்லை என்று மத்திய அரசின்மீது பழி போட்டுவிடுவார். உங்களது இரசிகர்களிடமும் நல்ல பெயர் வாங்கி விடுவார். மத்திய அரசாங்கம் சரி என்றாலும் உள்ளூர் பா.ஜ.க. வினர் சும்மா இருப்பார்களா! உங்கள் பெயரைச் சொன்னாலே அவர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்!

கோவிட் -19 தொடர்ந்து தனது தாக்குதலை விடாமல் மேற்   கொண்டிருக்கிறது. ஒரு முடிவும் இல்லாத நிலையில் உலக நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.  இந்தியாவிலும்  கூட அப்படி ஒன்று குறைந்ததாகத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் உங்கள் சுயநலத்திற்காக  பேச்சு வார்த்தை நடத்தி உங்கள் படங்களை ஓட வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்! உங்கள் ரசிகன் உங்கள் படத்தைப் பார்க்க வேண்டும். அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை!  அவன் சாகலாம்! அவன் பிள்ளைக்குட்டிகள் சாகலாம்!  ஆனால் நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீட்டிலேயே தங்கி பணத்தை எண்ணிக் கொண்டிருப்பீர்கள்!  அடேங்கப்பா! என்ன சுயநலம்!

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், பணியாளர்கள் - தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தொற்று நோய்க்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிள்ளைக் குட்டிகள் இல்லையா? அவர்கள் உங்களைப் போல கோடிக்கணக்கிலா பணம் சம்பாதிக்கிறார்கள்? 

தளபதியாரே! நீங்கள் இப்படியும் செய்யலாம். அரசாங்கம் அரங்கம் ஒன்றுக்கு பாதி பேரை அனுமதித்திருக்கிறது. நீங்கள் உங்கள் சம்பளத்தைப் பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைவார்! கஷ்ட காலத்தில் இதைக் கூட செய்யக் கூடாதா?

இவ்வளவு தானே! உங்கள் பிழைப்புக்காக ரசிகன் ஏன் சாக வேண்டும்? கொஞ்சம் சிந்தியுங்கள்! உங்களின் பதாகைகளுக்குப் பாலாபிஷேகம் செய்கிறானே அந்த ரசிகனுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு இது தானா!

நாங்கள் சொல்ல வருவதெல்லாம்: வேண்டாம்! இந்த விபரீதம்! இத்தோடு இந்தப் பிரச்சனையை விட்டு விடுங்கள்! மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டாம்!  அது உங்களுக்கு நல்லதல்ல!

No comments:

Post a Comment