Saturday 30 January 2021

இனி அடுத்து செய்வது என்ன?

 கெடா மாநிலம் இந்த ஆண்டு தைப்பூச விடுமுறையை இழந்துவிட்டது.

நம் அனைவருக்குமே அது வருத்தமான ஒரு நிகழ்வு தான். ஒரு  தனிப்பட்ட மனிதர் ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை மதிக்காதது என்றுமே நமது நினைவில் இருக்க வேண்டும்.

தைப்பூசம் என்பது தமிழர்களின் தனிப்பெரும் சமயப்பெரு விழா. எனினும் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களும், இன வேறுபாடின்றி,  இந்த விழாவை கொண்டாடவே செய்கின்றனர்.

இந்த நேரத்தில் அனைத்து இந்தியர்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதை சாதாரண விஷயமாக, ஏதோ பத்தோடு பதினொன்று, என்பது போல எடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்று நமது உரிமையின் மேல் கைவைக்கப்பட்டது போல நாளை வேறொன்றின் மீதும் கைவைக்கப்படலாம்.  இப்போது எப்படி நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையோ அதே போல நாளையும் இதே நிலை நேரலாம். சாத்தியம் உண்டு.

நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் ஒன்று தான். இவர்கள்  புறக்கணிக்கப்பட வேண்டும். இவர்களைத் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். மற்ற வகை புறக்கணிப்பெல்லாம் இவர்களுக்குப் புத்தியைத் தராது! அரசியல்வாதிகளுக்கு தேர்தல் வாக்கு ஒன்றே அச்சத்தை தரும் ஆயுதம்.

வருகின்ற தேர்தல் காலத்தில் இவர்கள் என்ன பெயரில் வாக்குக் கேட்க வருவார்கள் என்பது தெரியவில்லை.  பாரிசான் என்றா, பெரிக்காத்தான் என்றா அல்லது புதிதாக ஏதாவது பெயரில் வருவார்களா என்பது தெரியவில்லை.  ஒன்றை வைத்து இவர்களைத் தெரிந்து கொள்ளலாம். ம.இ.கா. யார் பெயரில் வாக்குக் கேட்க வருகிறார்களோ அவர்கள் தான் இவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

ம.இ.கா. வை முற்றிலுமாக புறக்கணிக்கலாம்! தவறில்லை! பினாங்கு மாநிலத்தில், இரத ஊர்வலத்திற்குத் தடை இருந்தும்,  ம.இ,.கா. வினரால்  தடையை உடைத்தெறிய முடிந்ததே!  அங்கு அவர்கள் செய்ய முடிந்ததை ஏன் கெடா மாநிலத்தில் செய்ய முயற்சி எடுக்கவில்லை?

நாம் எல்லாக் காலங்களிலும் "பாவம்!" பார்க்கின்ற சமுதாயம். இனி அதனையெல்லாம் தூக்கி எறிய வேண்டும். பாவம், தயவு தாட்சண்யம் என்பதை மூட்டைக்கட்ட வேண்டும்! சீனர்கள் எந்தக் காலத்தில் பாவம் பார்த்தார்கள்? அவர்கள் என்ன கெட்டா போய்விட்டார்கள்.

ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். நமது சமூகம் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு நாம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

இதற்கு ஒரே வழி:  தேர்தலில் இவர்களைப் புறக்கணியுங்கள்! இதைத்தான் நாம் அடுத்து செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment