பொதுவாக உலகளவில் இந்து கோவில்களை இடிக்கின்ற அல்லது உடைக்கின்ற நாடுகள் என்றால் அது பாக்கிஸ்தானும் நம் நாடான மலேசியா மட்டுமே!
இந்த இரு நாடுகளில் தான் கோவில்கள் உடைபடுகின்ற செய்திகளைப் பத்திரிக்கைகளில் நாம் பார்க்க முடிகிறது!
(பழமையான இந்து சாமியாரின் சமாதி பாக்கிஸ்தானில் அழிக்கப்பட்டது) நன்றி: BBC
பாக்கிஸ்தானில் ஒரு நூற்றாண்டு கால இந்து சாமியாரின் சமாதி, கடந்த டிசம்பர் மாதத்தில், தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டது. இது இந்த சமாதி மீதான இரண்டாவது தாக்குதல்.
இதற்கு முன்னரும் இது போன்ற இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றிருக்கிறன. பாக்கிஸ்தானில் இந்து சமயத்தினர் பாக்கிஸ்தான் மொத்த மக்கள் தொகையில் சுமார் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள்.சிறுபான்மை இந்துக்கள் என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு குறைவு.
ஆனாலும் பாக்கிஸ்தானின் முதன்மை நீதிபதியான குல்சார் அகமது "இந்த தாக்குதல் சர்வதேச அளவில் பாக்கிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம்" என்பதாகக் கூறியிருக்கிறார். உடைக்கப்பட்ட கோவில்களை மீண்டும் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இங்கு நமது நாட்டைப் பொறுத்தவரையில் மொத்த மக்கள் தொகையில் ஏழு விழுக்காடு இந்துக்கள் இருக்கின்றனர். இங்கு நமக்குள்ள பிரச்சனை என்பதெல்லாம் நமக்காக பேசுபவர்களை விட உடைபடும் கோவில்களுக்காக அரசாங்கத்தை ஆதரித்துப் பேசும் நம் இன அரசியல்வாதிகள் அதிகம் என்பதால் நமது பிரச்சனைகள் பலவீனம் அடைந்து விடுகின்றன!
இரவோடு இரவாக கோவில்களை உடைப்பதும், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் வைத்து கொண்டு நம் கண் முன்னே கோவில்களை இடிப்பதும் - இதெல்லாம் நமக்குப் பழகி, புளித்துப் போன விஷயமாக விட்டது!
ஆகக் கடைசியாக, கெடா மாநிலத்தில், அரசாங்க அனுமதியோடு இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டன. நமது கேள்விகளுக்கு அவர்கள் பக்கமிருந்து திமிரான பேச்சுக்கள் தான் வந்ததே தவிர அதைப்பற்றி அவர்கள் கொஞ்சமேனும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை!
ஒரு நாட்டில் தீவிரவாதிகள் என்றால் இன்னொரு நாட்டில் அரசாங்கமே தீவிரவாதியாய் செயல்படுகின்றதைப் பார்க்கிறோம்!
அதனால் என்ன நாம் வாய் மூடி மௌனியாய் இருக்க முடியாது! நம் எதிர்ப்பை காட்டித்தான் ஆக வேண்டும்!
ஆக, உலகளவில் பாக்கிஸ்தானும், மலேசியாவும் கோவில்களை உடைப்பதில் முன்னணி நாடாகத் திகழ்கின்றன!
No comments:
Post a Comment