Saturday 30 January 2021

ஏன் ஒழிக்க முடியாது?

 நமது காவல்துறையினர் என்னன்னவோ பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு விடுகின்றனர். 

ஆனாலும்  ஒரு சில பிரச்சனைகளுக்கு அவர்களால் தீர்வு காணவே  முடிவதில்லை! முடியவில்லை என்பதைவிட முடிவு காண அரசியல் அழிவுசக்திகள்  விடுவதில்லை!

அதில் ஒன்று தான் இந்த கந்துவட்டி அல்லது நம் நாட்டில் வட்டிமுதலை அல்லது ஆலோங் என்று சொல்லுகின்ற வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை.

இந்த வட்டிமுதலைகள் செய்கின்ற கொடூரங்களும், அழிச்சாட்டியங்களும் நிறையவே நமது செய்தித் தாள்களில் வெளியாகி இருக்கின்றன! வெளியாகிக் கொண்டிருக்கின்றன!

எத்தனையோ ஆண்டுகளாக இவர்களைப் பற்றியான செய்திகள் நமக்குக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்போது ஒரு சீனப்பெண்மணியைப் பற்றியான ஒரு செய்தியைப் படித்த போது மனம் கலங்கிவிட்டது.  இந்தக் காலத்தில் இப்படி ஒரு கொடுமையா. இவர்கள் எல்லாம் சுட்டுத்தள்ளப்பட  வேண்டியவர்கள் என்று எண்ண வேண்டியிருந்தது.

முவாயிரம் வெள்ளி (3000) தான் அவர் வாங்கிய கடன்.  அதுவும் அந்தக் கடனை அவர்  பெறும் போது அவருக்குக் கிடைத்ததோ வெறும் இரண்டாயிரத்து இருநூறு வெள்ளி(2200) மட்டுமே! இந்த RM2,200 கடனுக்கு அவர் இதுவரை செலுத்திய தொகையோ சுமார் மூன்று இலட்சத்திற்கு மேல்!  இன்னும் அந்தக் கடன் முடிந்த பாடில்லை! இன்னும் வட்டி கட்டிக் கொண்டு தான் இருக்கிறார்! எங்கே போய் முட்டிக் கொள்வது? ஆனால் அந்தப் பெண்மணி முட்டிக் கொள்ளவில்லை, சாகத் துணிந்துவிட்டார் என்பது தான் கடைசியாக அவர் எடுத்த முடிவு.

ஆனாலும் அவர் காப்பாற்றப்பட்டார். மலேசியா சமூக மேம்பாட்டு சிந்தனை இயக்கம் அவரது பிரச்சனையைக் கையில் எடுத்தது.  பொது மக்களின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர். காவல்துறைக்கும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த வட்டிமுதலைகளின்  அராஜகம் மட்டும் இன்னும் அடங்கவில்லை என்கின்றார் அந்தப் பெண்மணி. காவல்துறையினரை விட வட்டிமுதலைகள் இன்னும் வலிமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பது தான் வருத்தத்திற்கு உரியது.

இவர்கள் பின்னணியில் இருப்பவர் யார். கொள்ளையடித்த அரசியல்வாதிகளின் பணம். இலஞ்சமாகப் பெற்ற அதிகாரிகளின் பணம்.  கறுப்புப் பணம்.  இப்படி பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இவர்கள் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்!

ஒழிக்க முடியும்! அதற்கான நேரம் தான் இப்போது வந்திருக்கிறது!

No comments:

Post a Comment