Monday 11 January 2021

அவசரகாலம் பிரகடனம்!

 அவசரகாலம் என்றதும் நமது நாட்டில்  ஏதோ இராணுவ ஆட்சி வந்துவிட்டது என்கிற சந்தேகம் எதுவும் தேவையில்லை!

இராணுவ ஆட்சி என்பது இந்த நாட்டிற்கு ஏற்றதல்ல. ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் அது தெரியும்!

இந்த அவசரகாலம் என்பது வேறு. இரண்டு காரணங்களுக்கான அவசரகாலம் இது!  நாடாளுமன்றத்தைக்  கூட்ட முடியாது, பொதுத் தேர்தலை நடத்த முடியாது! இந்த இரண்டு விஷயங்கள் தானே  இப்போது  அதிகமாக அரசியல்வாதிகளால் பாடப்படுகின்ற பாடுபொருட்கள்! அதற்கான வாயடைத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

பொதுவாக இப்போது நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். அடுத்த தேர்தல் என்பது எப்போது வரும்?  கிட்டத்தட்ட இன்னும் மூன்று ஆண்டுகள் - அதாவது செப்டம்பர் மாதம் 2023 - ம் ஆண்டு பொதுத் தேர்தல் வர வேண்டும்.

இப்போது நமக்குள்ள கவலை எல்லாம் கோவிட்-19 தொற்று நோயும் அது வரை  நீடிக்கப்படுமா என்பது தான். இப்போதைக்கு  ஆறு மாதங்களே  என்று சொல்லியிருந்தாலும் அதை நீட்டிப்பதற்கு எல்லா முயற்சிகளும் எடுப்பார்கள் எனத்  தாராளமாக நம்பலாம்!  

நமது நாட்டைப் பொறுத்தவரை கோவிட்-19 அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டது! சாபா மாநிலத் தேர்தல் அவர்களுக்குப் பல வழிகளைக் காட்டிவிட்டது! இப்போது அதனையே இருகப் பிடித்துக் கொண்டார்கள். 

தொற்று நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட அவர்கள் முயற்சி செய்யவில்லை. அது இருப்பது தான் தங்களுக்குச் சாதகம் என்கிற நிலைமைக்கு அவர்கள் வந்து விட்டார்கள்!

ஒரு கருத்தை அரசாங்கம் வலியுறுத்தியிருக்கிறது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்குத் தண்டனைகள் உண்டு.  ஆனால் இது எப்படி சாத்தியம் என்பது நமக்குப் புரியவில்லை. இன்று குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? தேர்தல் வேண்டும்  என்று கூப்பாடு போடுகின்ற அம்னோ அரசியல்வாதிகள் தான்! பிரதமர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா என்கிற கேளவி எழுகிறது!

எது எப்படியோ இப்போதைக்கு கொரோனா தொற்று என்பது இன்னும் நீண்ட நாட்கள் நீடிக்கும் என நம்பலாம்! ஆனால் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்!

இது அவசரகாலமாக இருக்கட்டும்!  நாட்டை அலங்கோலப்படுத்த வேண்டாம்!

No comments:

Post a Comment