தைப்பூசம் இல்லை, அதனால் விடுமுறையும் இல்லை!
கெடா மாநிலத்தின், பாஸ் மந்திரி பெசார், முகமது சனுசி முகமது நோர் இப்படி ஒர் அறிவிப்பைச் செய்திருக்கிறார்.
சில நாள்களுக்கு முன் அவர் இந்து சங்கத்தினரைச் சந்தித்திருக்கிறார். ஒரு வேளை இது பற்றி அவர்களிடம் அவர் பேசியிருக்கலாம்!
என்றாலும் இந்த அறிவிப்பு சரியா தவறா என்பதை விட அவரின் அறிவிப்பு சரியாகக் கூட இருக்கலாம் என்பதையும் மறந்து விடக் கூடாது.
தைப்பூசம் என்பதை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இதன் பின்னர் வருகின்ற மற்றைய பெருநாள்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்பதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மந்திரி பெசார் என்பவர் அனைத்துக் கெடா மக்களுக்கும் அவர் மந்திரி பெசார் தான். மலாய்க்கரர்களுக்கு மட்டும், சீனர்களுக்கு மட்டும், இந்தியர்களுக்கு மட்டும் என்று அவரை நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் அது முட்டாள் தனம்! அப்படியெல்லாம் யாரும் பார்ப்பதில்லை! கெடா மந்திரி பெசார் உட்பட!
இன்றைய கோவிட்-19 தொற்று நோயின் தாக்கம் மிக மிக அதிகரித்துக் கொண்டு வருகிறது. கெடா மாநிலத்தில் இன்னும் அதிகம். அதனால் மந்திரி பெசார் சொல்லுவது நமது நன்மைக்காகத்தான். நாட்டின் நலன் கருதித் தான். இதில் நாம் கோபப்படுவது சரியில்லை.
பெருநாட்களில் அடுத்து வருவது சீனர் பெருநாள்.ஹரிராய ஹாஜி போன்ற பெருநாள்களும் வரிசைப் பிடித்து நிற்கின்றன. இந்த பெருநாள்களும் யாரும் கொண்டாடும் படியான சூழல் இல்லை. கோவிட்-19 இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கும்.
இந்த பெருநாள்களும், மந்திரி பெசார் அறிவிப்பின்படி, கொண்டாட முடியாது. கொண்டாட முடியாத எந்த பெருநாள்களுக்கும் விடுமுறை எடுக்க முடியாது என்பதைத் தான் அவர் கூறுகிறார்.
கோவிட்-19 தொற்று நோயினால் ஏகப்பட்ட விடுமுறைகள் எடுக்கப்பட்டு விட்டன. இந்த நேரத்தில் கொண்டாட முடியாத பெருநாள்களுக்கு ஏன் விடுமுறை கொடுக்க வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அது சரி தானே!
அதனால் இதனைப் பெரிது படுத்த வேண்டாம். கடந்த ஆண்டில் எந்த ஒரு பெருநாளும் உருப்படியான முறையில் நாம் கொண்டாட முடியவில்லை. வீட்டோடு அடைந்து கிடந்தோம். எங்கும் வெளியாக முடியவில்லை. காரணம் தொற்று நோய்.
அதே நிலைமை தான் இந்த ஆண்டும். எந்த மாற்றமும் இல்லை. பின்னர் ஏன் விடுமுறை? இப்போதும் எப்போதும் விடுமுறை என்கிற நிலை இருக்கும் போது அப்புறம் எதற்கு விடுமுறை என்பது தான் மந்திரி பெசாரின் கேள்வி.
விடுமுறை இல்லை! வேலையும் இல்லை!
No comments:
Post a Comment