Sunday 17 January 2021

என்ன தான் நடக்கிறது?

 நாட்டில் என்ன தான் நடக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

எங்குப்  பார்த்தாலும் கூச்சல்  குழப்பம்  என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!

மக்களிடையே வேலை  இல்லாப் பிரச்சனை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வியாபாரிகளின் கூச்சலும் கூக்குரலும்  அதிகமாக் கேட்கிறது!

போகிற போக்கைப் பார்த்தால் நாட்டின் இன்றைய நிலையை அரசாங்கத்தால் கையாள முடியுமா என்று ஐயமுற வேண்டியிருக்கிறது. பிரதமர் இருக்கிறாரா இல்லை எங்கேனும் ஒளிந்திருக்கிறாரா என்கிற நிலை உருவாகிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

எல்லாப் பக்கங்களிலுருந்தும் "எங்களுக்கு உதவுங்கள்!" என்று அனுதினமும் அறிக்கைகள் தூள் பறக்கின்றன!

முடிவெட்டும்  நிலையங்கள் இப்போது பெரும்பாலும் வெளிநாட்டவரால் நடத்தப்படுகின்றன. அவர்களின் தொழில் முடக்கப்பட்டால் அவர்களும் முடங்கிப் போய் விடுகிறார்கள்.  முதலாளிகளின்  நிலையும் சரியாக இல்லை.

உணவகங்களின் பிரச்சனை இன்னும் பூதாகாரமாக இருக்கின்றது. உணவகங்களுக்குப் போகுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இப்போது பெரும்பாலும்   மோட்டார் சைக்கிளில் வீடுகளுக்கே சென்று உணவுகளைக்  கொடுத்து வருகின்றனர். இப்போது இது தான் உணவகங்களுக்குக் கொஞ்சம் கை கொடுக்கிறது என்று சொல்லலாம். பெரிய சம்பாத்தியம் இல்லையென்றாலும் வண்டி ஓடுகிறது என்று கொஞ்சம் மூச்சு விடலாம். அதே நேரத்தில் வண்டி ஓட்டுபவர்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் நிறையவே கிடைக்கின்றன.

ஆனாலும் அவர்களின்  கோரிக்கை என்பது நியாயமானது தான்.  உணவகங்கள் திறக்கும் நேரத்தை அல்லது அடைக்கும் நேரத்தை  கொஞ்சம் கூட்டலாம்.  அப்படியே கொடுத்தாலும் அப்படி ஒன்றும் வாடிக்கையாளர்கள் குவியப் போவதில்லை!

இந்த அவசரகாலம், ஊரடங்கு நமக்கும் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. வீட்டிலேயே எத்தனை நாள்களுக்குத் தான் முடங்கிக் கிடப்பது என்கிற பிரச்சனையும் எழுகிறது.

நமக்குள்ள கோபம் எல்லாம் இந்த அரசியல் அராஜகங்களின் மேல் தான். வருகிறது.  இவர்கள் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தொற்றை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் தான் இன்று நாடு இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இப்போது நாம் திரிசங்கு நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். எப்போது போல நமது சராசரி வாழ்க்கையை வாழ முடியவில்லை. அதுவும் இல்லை இதுவும் இல்லை என்னும் நிலைமை!

ஒரு பக்கம் ஆளும் அரசியல்வாதிகள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். பதவி, பணம் எல்லாமே கிடைக்கிறது.  பொது மக்கள் தான் அழ வேண்டியிருக்கிறது.

என்ன தான் நடக்கிறது? ஒன்றும் நடக்கவில்லை என்பது தான் பிரச்சனை!


No comments:

Post a Comment