Tuesday 12 January 2021

இது இராணுவ புரட்சி அல்ல!

 நாட்டில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது புதிய செய்தி அல்ல!

ஆனால் அதில் ஒரு புதிய செய்தி உள்ளதாகவே நமக்குத் தோன்றுகிறது. அவசரகாலத்தை அறிவித்த பிரதமர் இது இராணுவ புரட்சி அல்ல  என்று கொஞ்சம் கூடுதல்  செய்தியாக அவர் கொடுத்திருப்பது ஏதோ ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பிரதமர் முகைதீனின் ஆட்சி,  சொல்லப்போனால் உண்மையில் கவிழ்க்கப்பட்டு விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை இழந்து விட்டார்.  இது வரை நடந்தவற்றைப் பார்ப்பவர்களுக்கு இது புரியும்.

ஆனால் என்ன நடந்தது? கோவிட்-19 தொற்றினால் நாட்டில் வேலை இழக்காத ஒரே மனிதர் என்றால் அது நமது பிரதமர் தான்! வேலை இழந்தும் வேலையில் இன்னும் இருக்கிறார்!  பிரதமருக்குள்ள அத்தனை சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்!அந்த தொற்று தான் ஆரம்ப காலத்திலிருந்து அவருக்குப் பக்கபலமாக இருந்து வருகிறது; இன்னும் இருக்கும்! எப்படியும் அடுத்த தேர்தல் வரை கோவிட்-19 நீடிக்கும் என்றே  நாம் ஒரு முடிவுக்கு வரலாம்! கோவிட்-19 எப்படி நீடிக்கும் என்பதற்கு அரசியல்வாதிகளுக்கு நாம் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை!

பிரதமர் இராணுவப் புரட்சி என்கிற எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமென்ன?  "என்ன நடந்தாலும் அன்வார் இப்ராகிம் பிரதமராக வர முடியாது,  நான் தான் பிரதமர்!"  என்பதைத் தான் இப்படி பூடகமாகச் சொல்லுகிறார்! இல்லாவிட்டால் இராணுவப் புரட்சி என்கிற சொல்லாடல் தேவையற்ற ஒன்று!

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதை தான். இவர்கள் கணக்குப்படி  ஆறு மாதங்கள் என்று சொன்னாலும் நமது கணக்குப்படி அது இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டு போகும் அன நம்பலாம்!

எப்படியோ நல்லது நடந்தால் நாம் பாராட்டலாம். அப்படி நடந்தால் இந்த  ஆட்சி நீடிப்பதற்கு நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை.

ஆனால் கொள்ளயடிப்பவர்கள் திருந்துவார்களா என்று பார்த்தால் அப்படி ஒர் அதிசயம் நடக்க  வாய்ப்பில்லை!

என்னவோ நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment