தமிழ் நாட்டில் வருகின்ற பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது மக்கள் கைகளில் தான் இருக்கிறது.
இப்போது உள்ள கணிப்புப்படி யார் இலஞ்சம் அதிகமாகக் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றது. அந்த வாய்ப்பு தி.மு.க. வுக்கே அதிகம் என்பது தான் இப்போதைய அரசியல் நிலவரம்!
இந்த நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் புதிதாக தொடங்கியிருக்கும் "மக்கள் நீதி மைய்யம்" கட்சியும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது! அந்த துணிச்சலுக்காக அவரைப் பாராட்டுவோம்.
அவர் பதவிக்கு வந்தால் "நாங்கள் இலவச கணினி" ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுப்போம் என்கிற அறிவிப்பைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
ஏழைக் குழந்தைகள் பலர் கல்வி கற்கும் இந்த நேரத்தில் கணினி தேவை தான் என்பதில் கருத்து வேறு பாடில்லை.
ஆனால் அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் இது போன்ற பிரச்சாரங்கள் எடுபடுமா என்று பார்ப்போம். அது எடுபடாது என்பது நமக்குத் தெரியும்.
தமிழர்கள் இலவசங்களுக்குக் கை ஏந்துபவர்களா திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன! இப்போது கமல்ஹாசனும் அதனையே செய்கிறார்.
மக்களுக்குத் தேவை இலவசங்கள் அல்ல என்று அவருக்கே தெரியும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வேண்டும். இப்போதைக்கு சமமான கல்வி இல்லை. அவர்களுக்கு ஏற்ற வேலை வேண்டும். இது தான் முக்கியம்.
இன்றைய விவசாயம் அரசாங்க உதவியோடு சரியான பாதையில் கொண்டு சென்றால் அதன் பின்னர் யாரும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அந்த விவசாயியால் தனது குடும்பத்தைக் கௌரவமாக பார்த்துக் கொள்ள முடியும். அவர்களின் பிள்ளைகளின் கல்விப் பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்ளுவார்கள்.
இன்றைய தமிழ் நாட்டின் பிரச்சனையே விவசாயிகளை அரசியல்வாதிகள் அலட்சியம் செய்வது தான். விவசாயி செழிப்பாக வாழ்ந்தால் தமிழ் நாடு செழிப்பாக வாழும்.
ஆனால் நடப்பதெல்லாம் என்ன? அனைத்துமே விவசாயிக்கு எதிரான போக்கு.
கமல்ஹாசனுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கலாம். ஆனால் அடிப்படை பிரச்சனையை அவர் புரிந்து கொண்டு பிரச்சனைகளை அணுக வேண்டும்.
இலவசம் நல்லதல்ல. அனைவரும் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களை நம்பி இருந்தால் அது ஒரு பிச்சைக்கார சமூகம். கொடுக்கிறேன் என்று சொல்லுபவனும் பிச்சைக்காரன் தான்!
No comments:
Post a Comment