ஒரு சில விஷயங்களில் நாம் கண்டிப்பாக இருக்க வேண்டியுள்ளது.
என்ன தான் நாம் கொல்லைப்புற அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறோம் என்றாலும் இன்றைய நிலையில் நாட்டில் எது நடந்தாலும் அரசாங்கம் தான் பொறுப்பை ஏற்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை!
இந்தக் காலக்கட்டத்தில் நாம் கோவிட்-19 தொற்று நோயினால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நமது அரசாங்கம் தான், வேறு யாருமல்ல!
அரசாங்கம் கவிழ்ந்து விடுமே என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டு அரசாங்கத்தை நடத்துவது மிக மிகக் கேவலம். இந்தப் பயத்தினால் நாம் எவ்வளவோ இழந்து விட்டோம். இனி மேலும் இது தொடரக் கூடாது என்பது தான் நமது நோக்கம்.
15-வது பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று சொல்லுபவர்களைக் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டுக் கொண்டு வர வேண்டும். அவர்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
நாடு இன்று இருக்கும் நிலையில், கொரோனாவினால் பல தொல்லைகளுக்கு மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில், அரசியல்வாதிகள் யாரேனும் "உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்!" என்று கூறினால் அவர்களைக் கைது செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் மீது இவர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அது அரசியல். இப்போது மக்கள் படுகின்ற அவதிகளும், அல்லல்களும் கொஞ்சநஞ்சமல்ல. மக்களின் வாழ்க்கை முறையே மாறிப் போய்விட்டது மட்டும் அல்ல நாறியும் போய் விட்டது.
இந்த நேரத்தில் அடுத்த தேர்தலைப் பற்றி பேசுபவர்கள் தேசத் துரோகிகள். மக்களின் பிரச்சனைகளை அறியாத மடத்தனமான அரசியல்வாதிகள்! இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் அல்லாமல் அடுத்த தேர்தலில் இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கக் கூடாது. இது தான் முக்கியம்.
தொற்று நோயினால் உலகமே ஊசாலடிக் கொண்டிருக்கிறது. தடுப்பு மருந்துகள் உண்டா என்பது இன்னும் தெரியவில்லை. உண்டு என்றாலும் அதன் வலிமை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எல்லாமே "அப்படி,இப்படி" என்கிற நிலைமையான் தான் போய்க் கொண்டிருக்கிறது. மக்களுக்குத் தங்களின் வாழ்க்கையைப் பற்றிய பயம் ஒரு பக்கம். எதுவும் நிரந்தரம் அல்ல என்கிற நிலைமை.
இந்த நேரத்தில் மக்களின் நிலை அறியாமல் "அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்! அடுத்த தேர்தலை நடத்துவோம்!" என்று எந்த அரசியல்வாதிகள் பேசினாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
இப்போது தேர்தல் என்பது அவசியம் அல்ல. ஓர் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த அரசாங்கத்தைச் செயல்பட விடுங்கள் என்பது தான் நாம் அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் கோரிக்கை.
தேர்தல் இப்போது முக்கியம் அல்ல. தொற்று நோய் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் வாழ வழி காட்ட வேண்டும். தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வியாபாரிகள் மீண்டும் தங்களது வியாபாரங்களைத் தொடங்க வேண்டும். நாட்டில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். இது தான் முக்கியமே தவிர தேர்தல் அல்ல.
தெர்தலைப் பற்றி பேசுபவர்களை இனி தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட வேண்டும்! இதுவே அரசாங்கத்திற்கு நாம் வைக்கும் வேண்டுகோள்.
No comments:
Post a Comment