Sunday 31 January 2021

ஏன் இந்த வெறித்தனம்?

 முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி  தோமஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்கள் நமக்கு வியப்பை அளிக்கின்றன!

அந்த காலக்கட்டத்தில் பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் எந்த அளவுக்கு அதிகாரத் திமிர் கொண்டவராக இருந்திருக்கிறார் என்று தனது  புத்தகத்தில் டோமி வெளிப்படுத்தியிருக்கிறார்.  நமக்கும் ஆச்சரியந்தான்!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை. நல்லது கெட்டது உண்டு.  ஆனால் அரசியலில் உள்ளவர்களோ நல்லது வேண்டாம் கெட்டது தான் வேண்டும் என்று ஓடி ஓடி தேடிப் பிடித்து  சமுதாயத்திற்குக் கெடுதல் செய்கிறார்களே - இவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? 

ஒரு செய்தி உண்மையாகவே  அதிர்ச்சி அளிக்கிறது. சென்ற 14-வது தேசியப்  பொதுத்தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் சாதாரணமானது அல்ல. "வாராது வந்து மாமணி"  என்று  சொல்லுவார்களே அதைப் போன்றது.

அந்த வெற்றிக்காக அனைத்து இனத்தவரும் கடுமையாய் உழைத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை. அந்த நேரத்தில் டாக்டர் மகாதிர் பிரதமராக வந்ததைக் கூட பிரமாதப் படுத்தினோம்!

ஆனால் நேர்ந்தது என்ன? அனைத்தும் புஸ்வானமாகி விட்டது!

டாக்டர் மகாதிர் பற்றியான நமது அபிப்பிராயம் மிகவும் உயர்ந்தது. காரணம் அவர் காலக் கட்டத்தில் தான் நாட்டின் வளர்ச்சி என்பது அபரிதமாக இருந்தது. வேலை வாய்ப்புக்கள் கொட்டிக் கிடந்தன என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. அந்த நேரத்தில் தான் வெளி நாட்டுத்  தொழிலாளர்கள் வந்து குவிந்தனர்.

இரண்டாவது முறையாக அவர் பிரதமராக வந்த போது அவர் செய்த தவறுகள் தான் இன்று நாட்டை  இந்த அளவுக்குக்  கேவலமான ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டது. ஏன் அவரைக் கூட மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டிய நிலையும்  ஏற்பட்டுவிட்டது!

தன்னால் இனி நாட்டை வழி நடத்த முடியாது என்ற நிலை இருந்த போது அவர் கௌரவமாக, ஏற்கனவே செய்த ஒப்பந்தபடி, அன்வார் இப்ராகிமிடம்  பிரதமர் பதவியை ஒப்படைத்திருக்க வேண்டும். அவர் அதனைச் செய்யவில்லை.

இடையில் அவர் நடத்திய அரசியல் நாடகம் பற்றி மலேசியர்கள் அறிந்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் முகைதீன் யாசின் கொல்லைப்புற வழியாக ஆட்சியை அமைத்துக் கொண்டார்!

ஆனாலும் மாமன்னர் பரிந்துரைப்படி  டாக்டர் மகாதிர்,  பிரதமர் பதவியை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா விடம் ஒப்படைத்திருந்தால் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த துன்பங்களை எல்லாம் மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்காது. டாக்டர் மகாதிர் மாமன்னரின் பரிந்துரையை ஏற்கவில்லை. தானே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்கிற நிலையில் தான் மாமன்னர் முகைதீனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார்!

இப்போது மலேசியாவின் சரித்திரமே மாறிவிட்டது!  உலகளவில் பல வகைகளில் நாடு மிகவும் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது! ஆனாலும் இவர்கள் தான் மலாய்-இஸ்லாம் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இவை அனைத்துக்கும் காரணம் ஒரே மனிதர்: டாக்டர் மகாதிர்! இவர் மனதில்  உள்ள இரக்கமல்ல - அரக்க குணத்தை நம்மால் கணிக்க முடியவில்லை!

இப்படியும் ஒரு மனிதர் இருக்க முடியுமா? இருக்கிறாரே! "மலபாரி" என்கிறார்களே!  இது தான் அவர்களின் குணமா!

No comments:

Post a Comment