Friday 8 January 2021

பயமுறுத்தல் நாடகம் வேண்டாம்!

 நடப்பு அரசாங்கத்தின் தலைவிதி இன்னும் எத்தனை நாளைக்கோ என்று நாள்களை எண்ண வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

அரசாங்கத்தில் அங்கம் பெற்றதுமல்லாமல், அமைச்சர் பதவிகளில் இருந்து கொண்டு அனைத்தையும் அனுபவிப்பது மட்டும் அல்லாமல் பிரதமர் முகைதீன் அரசாங்கத்திற்கு எந்த அளவு தொல்லைக்  கொடுக்க முடியுமோ அந்த அளவு தொல்லைக் கொடுப்பது  அம்னோ தரப்பினருக்குக் கை வந்த கலை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது!

அரசாங்கம் தனது கடமைகளைச் செய்ய முடியாமல் தொடர்ந்து தடையாக இருப்பது எப்படி என்பதை நாம் அம்னோ கட்சியிடமிருந்து தான் பாடம் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அம்னோவிடமிருந்து ஏதாவது ஒரு புகார் வந்து கொண்டே தான் இருக்கிறது.

"எந்த நேரத்திலும் நாங்கள் எங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வோம்!" என்கிற முணுமுணுப்பு அம்னோ பக்கம் இருந்து ஒவ்வொரு நாளும் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது! என்ன தான் இவர்களுக்குப் பிரச்சனை?

இப்போது அவர்களின்  வாய்க்கு இன்னொரு பிடி அவல் கிடைத்துவிட்டது!ஆமாம்! பெரும்பாலான அம்னோ கிளைகள் முகைதீன் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று தீர்மானம் நிறவேற்றியிருக்கின்றன! அப்படியென்றால் என்ன பொருள்? அனைத்துக் கிளைகளிலும் ஊழல் பெருச்சாளிகள் நிறைந்து விட்டார்கள் என்பது தான் பொருள்! அவர்களெல்லாம் மாட்டும் நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதும்  பொருள்!

இன்றைய நிலையில் முன்னாள் பிரதமர் நஜிப் இன்னும் வெளியே இருக்கிறார் என்றால் அதற்கு இன்றைய அரசாங்கம் தான் காரணம்! பின்னர் ஏன் இவர் இன்னும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்? அவர் மனைவிக்கும் 'நல்ல'தொரு தீர்ப்பும் வேண்டும் என்பதால் அவரும் அம்னோவோடு சேர்ந்து 'இன்னொரு தேர்தல் தேவை!'  என்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்! சொல்லுகிறார் என்பதை விட கதறுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்! நல்ல முடிவு தேவை என்பதற்காக ஒரு நெருக்கடியை பிரதமர் முகைதீனுக்கு இவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

நாம் சொல்ல வருவதெல்லாம் சரியோ தவறோ இந்த அரசாங்கத்தை செயல்பட விடுங்கள் என்பது தான்.  உங்கள் பயமுறுத்தல் நாடகம் தொடர்ந்தால் இது அரசாங்கத்திற்கும் பிரச்சனை, பொது மக்களும் எரிச்சல் அடைவார்கள்.

இன்னொரு தேர்தல் நடந்தால் உங்கள் நிலைமை என்ன என்பது உங்களுக்குத் தெரியாது.  ஒரு வேளை சென்ற பொதுத் தேர்தலை விட இந்த முறை இன்னும் மோசமான தோல்வியைச் சந்தித்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ளுவது அவ்வளவு சுலபமல்ல!

பயமுறுத்தல் நாடகம் வேண்டாம்!

No comments:

Post a Comment