Friday 29 January 2021

அவர்கள் முட்டாள்கள் அல்ல!

 பொதுவாக அரசியல்வாதிகளை நான் முட்டாள்களாக நினப்பதில்லை!

ஒரு வேளை மக்கள் நலன் என்று வரும் போது அவர்கள் முட்டாள்கள் போன்று நடிக்கலாம் ஆனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல! காரணம் மக்களின் பணத்தின் மீது கை வைக்கும் போது அவர்கள் மிகவும் அதிபுத்திசாலிகளாக நடந்து கொள்கிறார்கள் என்பது தான் அரசியல்வாதிகள் நமக்கு இதுவரை கற்பித்துக் கொண்டிருக்கும் பாடம்!

நடுவண் அரசில் அமைச்சராக இருக்கும் ஒருவர் "நல்லது செய்கிறேன்"  என்று நினைத்து கெடுதலைச் செய்கிறாரே அது இப்போது சமீபத்தில் நடந்திருக்கிறது.

பினாங்கு தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு,  தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையின் பேரில்,  தடை செய்திருக்கிறது. இதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரே காரணம் கோவிட்-19  தொற்று அதிகப்படியாக பரவாமலிருக்க இந்தத் தடை  தேவைப்படுகிறது 

ஆனால் மத்தியில் இருக்கும் அமைச்சர் இந்தத் தடையை நீக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தில் கூடி பேசி அந்தத் தடையை வெற்றிகரமாக வாபஸ் வாங்க செய்திருக்கிறார்.  பரவாயில்லை இந்த அளவுக்காகவாவது  அவருக்குத் திறமை இருக்கிறதே அதனைப் பாராட்டுகிறோம்! அவரைப் பொறுத்தவரை மாநில அரசாங்கத்தின் மூக்கை உடைத்துவிட்டார்! ஒரு சாராரின் பாராட்டுதலையும் பெற்றுவிட்டார்!

ஆனால் அதே அமைச்சர் அதே திறமையை இன்னொரு மாநிலத்தில் ஏற்பட்ட தலைகுனிவை ஏன் அவரால் சரிசெய்ய முடியவில்லை என்கிற கேளவியை நாம் கேட்கத்தான் செய்வோம்.

கெடா மாநிலத்தில் இந்துக்களுக்கு  தலைகுனிவு ஏற்பட்டதே அப்போது அவர் எங்கே போய் ஒளிந்து கொண்டார்? பாஸ் கட்சியின் கீழ் ஆட்சி அங்கு நடைபெறுகிறது என்பது உண்மை தான்.  ஆனால் அந்த ஆட்சியில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

இப்போது உங்களால் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் பேச முடிந்ததே அப்போது ஏன் நீங்கள் மத்திய அரசாங்கத்தில் அங்கம் பெற்றிருக்கும் பாஸ் தலைவர்களுடன் பேச எந்த முயற்சியும்  எடுக்கவில்லை? பேசியிருந்தால் நல்லதொரு முடிவு கிடைத்திருக்குமே! பாஸ் கட்சியினர் அந்த அளவுக்குக் கெட்டவர்களா, என்ன?  என்னைப் பொறுத்தவரை அவர்கள் நல்லவர்களே! 

இங்கு நடந்ததெல்லாம் "நீயா நானா" போட்டி மட்டும் தான்.  கொஞ்சம் திமிரை விட்டுக் கொடுத்திருந்தால், கொஞ்சம் தலைக்கனத்தை  விட்டுக் கொடுத்திருந்தால்  இந்த விடுமுறை பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வைக் கண்டிருக்கலாம்.

இப்போது ம.இ.கா. வினர் புதியதொரு வழியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். மக்களைப் போலவே நாளிதழ்களில் அவர்களும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்!  இந்த ஆவேச அறிக்கைகளினால் எந்தப் பயனும் இல்லை. 

சம்பந்தப்பட்டவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள். கூடிப் பேசுங்கள். ராமசாமி என்றால் நாங்கள் வீரத்தைக் காட்டுவோம் சனூசி என்றால் சுருட்டிக்கொள்வோம் என்கிற நிலை வேண்டாம்!

மீண்டும் சொல்லுகிறேன் அவர்கள் முட்டாள்கள் அல்ல!

No comments:

Post a Comment