Tuesday 19 January 2021

இதுவும் கடந்து போகும்!

 கொவிட் 19 தொற்று நோய் எப்போது  ஒழியும் எப்போது முடங்கும் என்று நாம் கணக்குப் பண்ணினால் அதுவோ நம்மிடமிருந்து நழுவிக் கொண்டே போகிறது! 

எங்கே போகும், எப்போது போகும், என்ன ஆகும் என்பதற்கெல்லாம்  நல்லதொரு பதில் இல்லை.

ஒரே ஆறுதல் என்னவெனில் "இதுவும் கடந்து போகும்!" என்கிற  நம்பிக்கை மட்டும் உண்டு. ஆனால் எப்போது என்கிற கேள்வி மட்டும் வேண்டாம்!

இப்போது தொற்று கட்டுக்கடங்காமல் போய்க்  கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு நாளும் நாம் பயப்படுகிற அளவுக்கு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது!

மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை என்கிற செய்தியும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கூட்டப்பட வேண்டும். வேறு வழி தெரியவில்லை!  படுக்கைகளைக் கூட்டுவது ஒன்று தான் வழி.  ஏதோ ஒரு இடத்தில் மட்டும் அல்ல.  பொதுவாகவே எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைமை தான்!

கொரோனா நோயாளிகளும்  கூடிக் கொண்டே போகிறார்கள்.  படுக்கைகள் கூடிக் கொண்டே போகின்றன. இறப்பும் கூடிக் கொண்டே போகின்றது.

நாட்டிலும் வேறு வழி தெரியாமல் அவசரகாலம்  அளவுக்கு பிரச்சனை வளர்ந்து விட்டது. அதுவே இப்போது ஒரு பயமுறுத்தலாகவும் மாறிவிட்டது. யாராவது எதிர்த்துப் பேசினால் அவர்களை 'உள்ளே' தள்ளவும் அதிகாரம் வந்திருக்கிறது!

அது அரசியல் என்று தெரிந்தாலும்  நமது பிரச்சனை தான் நமக்கு முக்கியம். இன்று அடித்துக் கொள்வார்கள், நாளை கூடிக் கொள்வார்கள்1 அது தான் அவர்களது நிரந்தர கொள்கை! 

ஒன்று ஆறுதல் தருகிறது. அவசரகாலம்  வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுப்பது   மாமன்னர் கையில் இருக்கிறது. ஒரு வகையில் இப்போது தான் ஆட்சியைத் தனது கையில் எடுத்திருக்கிறார் மாமன்னர். பிரதமர் தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயல்பட முடியாது. 

முன்னாள் பிரதமர் மகாதிர் தனது தலைமையில் இருக்கும் கட்சியின் மூலம் மாமன்னருக்கு  "அவசரகாலம் தேவை இல்லை" யென்பதாக கடிதம் அனுப்பியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அது அவரது கட்சியின் முடிவு. அது மட்டுமல்ல. நாட்டில் உள்ள பலரும் "தேவை இல்லை" என்பதாகவே கூறி வருகின்றனர்.

எது நடந்தாலும் "இதுவும் கடந்து போகும்!"  என்று நம்பிக்கை கொள்வது தான் நமது நிலை!

No comments:

Post a Comment