Saturday 9 January 2021

சிந்தித்து செயல்படுங்கள்

 தைப்பூசம் என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் நாடுகளில் நமது  மலேசிய நாடும் ஒன்று.

இங்குள்ள அனைத்து  மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக தைப்பூசம் கொண்டாடப்படுவதும் நாம் அறிந்தது தான்.

ஆனால் என்னவோ தைப்பூசம் என்றால் அது பத்துமலையைத் தான் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. அது பெரும்பாலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோரும் கூடும் இடமாகவும் அறியப்படுகிறது. அதோடு சுற்றுப்பயணிகள் வேறு.

இப்போது பத்துமலை மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும்  தைப்பூச கொண்டாட்டங்கள் நடக்குமா என்பதும் கேள்விக்குறியே.  காரணம் எல்லாக் கோயில்களிலும் பக்தர்கள் நிரம்பி வழிவர். 

பினாங்கு மாநிலத்தில் தைப்பூச கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநில துணை முதல்வர் அறிவித்திருக்கிறார்.  சிலாங்கூர் மாநிலமும் தைப்பூச கொண்டாட்டங்கள் ரத்து செய்யபடும் என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களும் இவர்களையே பின்பற்றுவார்கள் என்பதும்  பொதுப்படையாக நமக்குத் தெரிகிறது.

ஆனால் பத்துமலை தைப்பூசம் என்பது கொஞ்சம் வித்தியாசமானது. தைப்பூசம் என்றாலே பத்துமலையைத் தவிர வேறு எதுவும்  நமக்குத் தெரிவதில்லை.

இந்த ஆண்டு தடை என்றால் அடுத்த ஆண்டு எப்படி என்று பத்துமலை நிர்வாகம் யோசிப்பதில் நியாயம் உண்டு. 

கொரோனா தொற்று அடுத்த ஆண்டும் தொடருமா, தொடர்ந்தால்  இன்றைய நிலை தான் அப்போதும் வரும். வேறு என்ன தீர்வைக் காண முடியும்?  ஆனால் அந்த அளவுக்குப் பயப்பட ஒன்றுமில்லை.  இனி விரைவில் தொற்றுக்கான தடுப்பூசி ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அது நல்லமுறையில் மக்களுக்குப் பயன் தரும்  என்று நாம் நம்புகிறோம். நம்பிக்கை தான்!  அடுத்த ஆண்டு நிலவரம் எப்படி இருக்கும் என்பது இப்போதே கணிக்க முடியாது.

இப்போதைய நமது அவசரத் தேவை என்பது கொரோனா தொற்று ஒழிக்கப்பட வேண்டும்.  ஒழிக்கப்படவில்லை என்றால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் ஆபத்துக்கு உள்ளாகும் என்பதில் ஐயமில்லை.

அதனால் திருவிழாக்கள் எந்த அளவுக்கு முக்கியமோ  அதே அளவுக்கு மக்களின் நலன் முக்கியம். திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் வரும்.  ஆனால் மக்களின் நலன் பாதிக்கப்பட்டால் அது மீண்டும் வராது.

நமது வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. 

No comments:

Post a Comment