Thursday 28 January 2021

மீண்டும் பொருளாதார முடக்கமா?

 மீண்டும் ஒரு பொருளாதார முடக்கம் ஏற்படுமா என்கிற அச்சம் சமீபகாலமாக  ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பொதுவாக இன்றைய நிலையில் அனைத்து வணிகங்களும் திறக்கப்பட்டு ஒரு சீரான நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. பாராட்டுகிறோம்!

ஆனால் எந்த நேரத்திலும்  அரசாங்கம் பல்டி அடிக்கலாம் என்கிற எண்ணத்தையும் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.  ஒரு நிலையற்ற அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்!  அவர்களின் சிந்தனை, எண்ண ஓட்டம் எதனையும் கணிக்க முடியவில்லை.

நாட்டின் நிலைமை சீரடைய வேண்டும் என்பதை விட தங்களது அரசியல் நிலைமை சீரடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! 

இந்த நிலையில் அவர்கள் நாட்டின் நலனில் அக்கறை கொள்வார்களா அல்லது தங்களது நலனில் அக்கறை கொள்வார்களா என்றால் தங்களின் நலனில் தான் என்பது புலப்படும்!

அவசரகாலம் என்பதே அரசியல்வாதிகளின் நலன் சார்ந்தது தானே! இதைக் கூடவா நம்மால் புரிந்து கொள்ள முடியாது!

முதல் முடக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. வேலை வாய்ப்புகள் இழந்தோர் பல இலட்சம் பேர் என முன்பே கூறப்பட்டது. பல ஆயிரம் வணிக நிலையங்கள் மூடப்பட்டன.  பெரும் தொழில்களின் பலர் தொழிலை விட்டே போய்விட்டனர்.  சிறிய தொழில்கள் பல நசுக்கப்பட்டுவிட்டன. இன்னும் பலரால் தலை  எடுக்கவே  முடியவில்லை.

முதல் முடக்கத்தின் பாதிப்பே இன்னும் அப்படியே தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் இரண்டாம் பொருளாதார முடக்கம்  என்றால் மக்களின் நிலை என்ன என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.

அதுவும் சுமார் 28 இலட்சம் பேர் வேலை இழப்பர் என்றும் கணிக்கப்படுகிறது. இது நாள் வரை அரசாங்கம் மூலம் சில உதவிகள் அல்லது தங்களது ஊழியர் சேமநிதியிலிருந்து ஓரளவு மக்களால் தங்களது பணத்தை எடுக்க முடிந்தது.

இரண்டாம் பொருளாதார முடக்கம் என்றால் அவர்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்?  மக்கள் என்ன அரசாங்க வேலையிலா இருக்கிறார்கள்!  ஏதாவது ஒரு வேலையில் இருந்தாலே அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கும் வேட்டு வைத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்?

இந்த நிலையில் வெளி நாட்டுத் தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. அதனையும் தவிர்க்க முடியாது. அவர்களுக்குக் குறிப்பிட்ட துறைகளில் வேலை வாய்ப்புக்களைக் கொடுத்துவிட்டு மற்ற துறைகளில் மலேசியர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 

இன்றைய நிலையில் எல்லாத் துறைகளிலும் வெளி நாட்டுத் தொழிலாளர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.

பொருளாதார முடக்கம் மீண்டும் வரும் என்கிற பேச்சு அச்சத்தைக் கொண்டு வருகிறது.

அப்படி வராது என்கிற உறுதி மொழி இன்னும் வரவில்லை. வரும் என்றாலும் வாரா என்றாலும் அடி என்னவோ நமது மக்களுக்குத் தான்!

No comments:

Post a Comment