Wednesday 13 January 2021

தைப்பொங்கல் வாழ்த்துகள்!

 தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

இதை வெறும் வாழ்த்து செய்தியாக மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள். வேறு ஒரு செய்தியையும் கொடுத்திருக்கிறேன். அதனை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இன்று காலை (14-1-21) தமிழக முதலமைச்சரின் பொங்கல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அப்போது அந்நிகழ்வில் இசை ஒன்றும் இசைக்கப்பட்டது. இசைக்கப்பட்ட அந்தப்  பாடல் வரிகள் "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா"! அந்தப் பாடல் என்னைக் கொஞ்சம்  தடுமாற வைத்துவிட்டது.

நடப்பதோ தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்ச்சி.  ஆனால் பாடப்பட்டப்  பாடலோ திராவிடரின் பெருமை!  தமிழர்களுக்கு இதனால் என்ன பெருமை?

அதனால் நமது தமிழ் மக்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது தான். இனி திராவிடர், திராவிடம் போன்ற வார்த்தைகளை நமது அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். 

இதனால் யாரும் மனம் புண்பட்டுப் போவதில்லை.  

தமழர் என்றால் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பது தனி.  தெலுங்கர் என்றால் தெலுங்கு மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பது தனி. மற்றும் அதனை ஒட்டிய பெருமைகள் அவர்களுக்கே உரியது. அதே போல மலையாளிகள்  என்றால்அவர்களின் மொழி,  கலாச்சாரம், பண்பாடு, அவர்களுடைய பெருமைகள் அனைத்தும் அவர்களுடையதே.  திராவிடம் என்றால் தமிழ் நாடு, ஆந்திரா, கேரளம், கர்நாடகா. இந்த நான்கு மாநிலங்கள் சேர்ந்தது தான் திராவிடம் அல்லது திராவிடர் என்று சொல்லப்படுகிறது.  இந்த திராவிடம் என்கிற சொல்லே தமிழ் நாட்டில் மட்டுமே இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! மற்ற மாநிலங்களில்  இப்படி ஒரு வார்த்தை இருப்பதாகக் கூட அவர்களுக்குத் தெரியாது!

இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன்?  நாம் தமிழர் என்போம், அவர்கள் தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்று  வழக்கம் போல சொல்லட்டும். இதில் திராவிடர், திராவிடம் என்று வலிந்து நாம் திணிக்க வேண்டாம்.  நம்மைத் தமிழர் என்போம். அவர்களைக் குறிக்கும் போது தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்போம். 

நாம் யாரையும் குறை சொல்லவில்லை, நமக்குச் சில பெருமைகள் உண்டு  அதே போல  அவர்களுக்கும் பல பெருமைகள் உண்டு. 

இனி திராவிடர் என்னும் சொல்லே வேண்டாம்!  அவர்களுக்கென்று பெருமைகள் உண்டு. அதனை வளர்ப்போம்!

ஆனால் நமது எழுத்தில் அந்த சொல்லே வேண்டாம்! புறக்கணிப்போம்!

No comments:

Post a Comment