மலாக்கா மாநிலத் தேர்தலில் ம.இ.கா. தனது வேட்பாளரை நிறுத்துமா என்கிற கேள்விக்கு "ஆம்! நிறுத்தும்!" என்று ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார். வாழ்த்துகிறோம்!
இத்தனை ஆண்டுகள் பாரிசான் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ம.இ.கா. இம்முறை பெரிகாத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் எனத் தெரிகிறது.
ம.இ.கா. தனது வழக்கமான தொகுதியில் போட்டியிடும் என்பதில் ஐயமில்லை. அந்த தொகுதி ம.இ.கா.வினர், ம.இ.கா. வேட்பாளாருக்காக பிரச்சாரம் செய்வார்கள் என்பதையும் நம்பலாம்.
ஆனாலும் சிக்கலும் தெரிகிறது. ம.இ.கா. காலங்காலமாக தேசிய முன்னணியின் ஓர் அங்கம். இந்த முறை அதன் கிளைத் தலைவர்களிடையே தாங்கள் யாருக்காக பிரச்சாரம் செய்கிறோம் என்பதைக் கூட அவர்களால் கணிக்க முடியுமா என்று தெரியவில்லை!
ம.இ.கா.வினரைப் பொறுத்தவரை அவர்கள் போட்டியிடுவது ஆளுங்கட்சியின் சார்பில் அவ்வளவு தான். மக்களைப் பொறுத்தவரை அதைவிட இன்னும் தெளிவற்ற நிலை! இவர்கள் யார்? அவர்கள் யார்? என்பதிலே குழப்பம்! இரண்டும் ஆளுங்கட்சிகள் தான் என்று யோசிப்பவர்களும் உண்டு! அப்படியென்றால் போட்டியிடுபவர்கள் ஏன் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்கிற குழப்பம் வேறு!
எப்படியோ அது பாரிசான் நேஷனலாக இருந்தாலும் சரி பெரிகாத்தான் நேஷனலாக இருந்தாலும் சரி ஒரே கட்சி என்கிற தோற்றத்தைத்தான் தரும். பெரிகாத்தான் சார்பிலும் ஒரு ம.இ.கா. வேட்பாளர் பாரிசான் நேஷனல் சார்பிலும் ஒரு ம.இ.கா. வேட்பாளர் என்கிற நிலை வரக்கூடும்!
தேசிய முன்னணி என்கிற ஒரு கூட்டணியில் தான் ம.இ.கா. இத்தனை ஆண்டுகள் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. அது அதிகமாகவே மலாய் வாக்காளர்களை நம்பியே வளர்ந்து ஒரு கட்சி. ஆனால் இந்த முறை? இப்போதுள்ள சூழல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!
ஒரு வேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ம.இ.கா. தன்னை பெரிகாத்தான் நேஷனலில் இணைத்துக் கொள்ளக் கூடும். ஆனால் அதுவும் ஐயத்திற்குரியது தான். அது மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனலின் வெற்றியைப் பொறுத்து அமையும்!
இன்னொரு பக்கம் பாரிசான் நேஷனல் தான் ம.இ.கா. வினருக்கு ஏற்ற ஒரு கூட்டணி. காரணம் அப்படித்தான் இந்நாள் வரை அவர்களுக்கு அது சாதகமாக அமைந்திருந்தது. அங்கும் இப்போது ஒரு சில அம்னோ தரப்பு ம.இ.கா. வுக்கு சாதகமாக இல்லை. அப்படி அம்னோ எதிர்த்தாலும் அம்னோ கட்சியே பலவீனமான நிலையில் இருக்கும் போது எதிர்ப்பவர்களை அம்னோ சட்டைசெய்யாது என்று நம்பலாம்!
ம.இ.கா. வின் நிலை சரிதானா என்று நமக்கும் தெரியவில்லை. பாரிசான் நேஷனலா அல்லது பெரிகாத்தான் நேஷனலா என்கிற போது தற்காலிகமாக பெரிகாத்தானை ம.இ.கா. தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால் இது ஆளுங்கட்சியாக மாறுமா என்பதில் நமக்கும் ஐயப்பாடுகள் உண்டு.
ஆனால் ம.இ.கா.வில் உள்ள அரசியல்வாதிகள் அரசியல் விற்பன்னர்கள்! அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்!