இன்றைய நம பெரிகாத்தான் அரசாங்கம் என்ன நிலையில் செயல்படுகிறது என்பது இந்த ஒரு விஷயத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது நாட்டில் இந்தியர்களே இல்லை என்கிற ஓர் எண்ணத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளே இருப்பது கூட அவர்களின் கண்ணுக்குத் தெரியவில்லை. அடிக்கடி மறந்து போகிறார்கள்! ஏன் அவர்கள் கூடவே பணி புரிகிற தொழிலாளர் அமைச்சர் ஓர் இந்தியர் என்பது கூட அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை! ஆனால் இவர்களை எல்லாம் நாம் ஒன்று சேர்ந்து பதவிக்குக் கொண்டு வர வேண்டுமாம்! அப்படி ஒரு கனவை அவர்கள் காண்கிறார்கள்!
சமீப காலங்களில் கோவிட்-19 என்னும் கொடிய நோயினால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைய அரசாங்கமோ இந்த நோய் ஏதோ பூமிபுத்ராக்களை மட்டும் தாக்கியிருப்பதாக எண்ணுகிறார்கள்! இந்த நோயினால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கூட அவர்களால் உணரமுடியவில்லை!
இலவச மடிக்கணினிகள் சுமார் 150,000, இந்நேரம் அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்கவில்லை. நாட்டில் உள்ள 527 தமிழ்ப்பள்ளிகளில் ஆறு பள்ளிகள் மட்டுமே இந்த உதவியின் கீழ் கணினிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கு 527 தமிழ்ப்பள்ளிகளில் சுமார் 80,500 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த மாணவர்களில் சுமார் 406 மாணவர்கள் மட்டுமே இதுவரை பயன் பெற்றிருக்கின்றனர்.
அப்படியென்றால் மற்ற மாணவர்களின் நிலை என்ன? அரசாங்கம் என்ன சொல்ல வருகிறது?
இந்திய சமுகம் பெரும்பாலும் வேலை செய்து பிழைக்கின்ற சமூகம். வேலை இல்லை என்றால் அவர்களுக்கு வருமானம் இல்லை. வேலை செய்கின்ற இடத்தில் கூட அவர்களுக்கு மற்ற இனத்தவர்களுக்குக் கிடைக்கின்ற ஊதியம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. குறைவான ஊதியம் தான்.
இப்படி மலேசியாவில் மூன்றாவது பெரிய இனமான இந்தியர்களுக்கு எல்லாத் துறைகளிலும் ஊதியத்தில் வேறுபாடுகள் உண்டு. இப்படி பல வழிகளில் முதலாளிகளால் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் இந்தியர்களை அரசாங்கமும் பல வழிகளில் வஞ்சிக்கிறது.
அதைத்தான் இந்த மடிக்கணினி பிரச்சனையில் நாம் பார்க்கிறோம். இன்று அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிப்பவர்கள் ம.இ.கா.வினர் தான். ஆனால் அவர்கள் குரல் கொடுக்கவில்லை! ஒருவேளை அவர்களால் செய்ய முடிந்தது அவ்வளவு தான்!
எதனை அடிப்படையாக வைத்து கல்வி அமைச்சு இந்த மடிக்கணினிகளைக் கொடுக்கிறது என்பது நமக்கும் புரியவில்லை!
No comments:
Post a Comment