சுமார் 12 ஆண்டுகளாக தனது மகளுக்காக காத்துக்கிடக்கும் தாய் அவர். இது நாள் வரை அவரது மகள் பிரசன்னாவை அவரால் பார்க்க முடியவில்லை. மகளைக் கடத்திக் கொண்டு போனவர் அவரது தந்தை பின்னர் இஸ்லாத்திற்கு மாறியவர்.
பிரசன்னாவின் தந்தையை கைது செய்ய நீதிமன்ற உத்தரவிட்டும் ஒன்றும் ஆகவில்லை! காவல்துறையினர் தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரித்து விட்டனர்!
தாய் இந்திராகாந்தி எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இப்போது அவருக்கு இருக்கும் இன்னொரு வழி: அவரது பிரச்சனையை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரியை அவர் இப்போது வலியுறுத்தி வருகின்றார். இதன் மூலம் காவல்துறையின் செயலற்ற தன்மைக்கும் இயலாமைக்கும் என்ன காரணம் என்பது தெரிய வரும்.
ஒரு காலக் கட்டத்தில் "இதோ மகள் வந்துவிடுவார்! கொஞ்சம் பொறுத்திருங்கள்!" என்றெல்லாம் ஆசை காட்டினர். நம்பிக்கையான வார்த்தைகளால் உறுதி அளித்தனர். ஆனால் அத்தனையும் வெற்று வாக்குறுதிகள் என்பது பின்னர் தெரியவந்தது! இந்த செய்திகள் அனைத்தும் பத்திரிக்கைகளில் வெளிவந்து அமர்க்களப்பட்டன!
ஒரு தாயை ஏமாற்றுவதற்கு என்ன என்ன வழிகளையெல்லாம் காவல்துறை பின்பற்றியது என்பதை இந்த நாடே அறியும்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் இறந்து போன தியோ பெங் ஹாக் மரணமும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இதுவும் 12 ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற தீர்க்கப்படாத ஒரு வழக்கு.
தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமது காசிம் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ் போன்றவர்களின் வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது போல இந்திராகாந்தியின் வழக்கையும் விசாரிக்க விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே.
நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அவைகளுக்கும் ஒரு தீர்வைக் காண முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
இந்திராகாந்தி பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்பட இன்றைய அரசாங்கம் பிரச்சனையைக் கையில் எடுக்க வேண்டும் என நாமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
No comments:
Post a Comment