மித்ரா என்றாலும் சரி செடிக் என்றாலும் சரி நம்மைச் சுற்றி ஒரு நரிக்கூட்டம் வலம் வந்து கொண்டேயிருக்கிறது!
இவர்களின் கொள்கை என்ன? "எல்லாமே எங்களுக்குத் தான்!" அதைத் தவிர வேறு கொள்கைகள் அவர்களுக்கு இல்லை!
இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய நினைத்தால் உடனே இந்த நரிக்கூட்டம் தான் முன் நிற்கிறது! அரசாங்கத்திடம் நாங்கள் தான் இந்தியர்கள்! நீங்கள் எதனைச் செய்ய நினைத்தாலும் எங்களைத் தாண்டி உங்களால் செல்ல முடியாது என்று அவர்கள் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து அழுது புலம்புகிறது!
யார் என்ன செய்ய முடியும்? அந்தப் பக்கத்துக்குத் தேவை எல்லாம் அவர்களுக்கான பங்கு. அது போதும்! அது கிடைத்துவிட்டால் மித்ரா இந்தியர்களுக்குப் போய் சேர்ந்துவிட்டது என்பது பொருள்!
கடைசியில் என்ன ஆகிறது? இந்தியர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை! ஆனால் அந்த நரிகளுக்கு எல்லாமே ஆகிவிடுகிறது. கிடைக்க வேண்டியது கிடைத்துவிடுகிறது. மித்ரா எங்கே போய் சேர வேண்டுமோ அங்கே போய் பத்திரமாக சேர்ந்து விடுகிறது.
தங்களது தேவைகள் பூர்த்தியடைந்த பின்னர் மித்ரா என்ன ஆகிறது? அது இன்னொரு கொடுமை. "கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டோம். இனி எங்கள் சமுதாயத்தில் நிதியுதவி பெற வேண்டியவர்கள் யாரும் இல்லை. அதனால் பெருமனம் கொண்டு நீங்கள் பயன்படுத்தப்படாத பணத்தைப் பெற்றுக் கொண்டு உங்க புள்ளைக்குட்டிகளோடு மகிழ்ச்சியாக வாழுங்கள்! உங்களுக்குப் புண்ணியமாய் இருக்கும்!" என்று சொல்லி வாழ்த்தி வணங்கி மீண்டும் எங்கிருந்து வந்ததோ அங்கே திருப்பி அனுப்பிவிடப்படுகிறது!
ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் நடக்கிறது என்கிறார்கள் ஆண்டு அனுபவித்தவர்கள்!
ஏன் நமது இனத்தில் இனப்பற்றுள்ளவன் யாருமே இல்லையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆனால் அந்த இனப்பற்றுள்ளவர்களை ஓரங்கட்டிவிடுகிறது இந்த நரிக்கூட்டம். அவர்களைக் கிட்டையே அண்ட விடுவதில்லை இந்த நரிகள்.
இவர்களைப் பேசவிட்டால் இவர்களைப் போல யோக்கியர்கள் இந்த உலகில் யாருமே இல்லை என்பதை மணிக்கணக்காக கதை அளப்பார்கள்!
என்ன செய்வது? இந்த நரிக்கூட்டத்தை எப்படி அடக்குவது? அரசியலிலிருந்து இவர்கள் துரத்தியடிக்கப்பட வேண்டும். புதிதாகவும் நரிக்கூட்டங்கள் வரலாம்! எச்சரிக்கையாய் இருப்பது நமது கடமை.
நரிக்கூட்டத்தை ஒழிக்கும் நேரம் வந்துவிட்டது. இனி ஒழிந்துவிடும் என நம்பவும் இடமிருக்கிறது.
ஒழிப்போம்! ஒழிப்போம்! ஒழிப்போம்!
No comments:
Post a Comment