மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பலவித காரணங்களுக்காக அங்கே போகின்றனர்.
கல்வி என்பது தான் முதன்மையான காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எனக்குத் தெரிந்தவர்களில் பலர் மருத்துவம் பயில 1960-களிலேயே அந்நாட்டிற்குச் சென்றிருக்கின்றனர். அந்த அளவுக்கு அந்நாட்டின் மருத்துவக் கல்வி புகழ் பெற்றது. போனவர்களில் பலர் திரும்பி வரவேயில்லை. அங்கேயே திருமணம் செய்து கொண்டு பலர் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.
அதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கான உறவுகள் சிறப்பாகவே இருக்கின்றன. இங்கிருந்து போனவர்கள் திரும்ப இங்கு வருவதில்லையே தவிர அங்குள்ளவர்கள் இங்கு வர வாய்ப்பில்லை. அதனை அவர்களும் விரும்புவதில்லை இவர்களும் வரவேற்பதில்லை!
பழம் பறிக்கும் தொழிலாளர்கள் அல்லது ஏதோ ஒரு துறையில் திறன் பெற்றவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்புக்கள் சிறப்பாகவே இருக்கின்றன. அப்படிப் போன குடும்பங்களையும் எனக்குத் தெரியும்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பழம் பறிக்கும் தொழிலாளர்களாக போனவர்களின் வீட்டுப் பிள்ளைகள் அங்கே கல்வி கற்று, மேற்கல்வி முடித்து, இப்போது நல்ல வேலைகளில் இருக்கின்றனர். அங்கு பெரும்பாலும் தகுதி அடிப்படையே முக்கியம் என்பதால் வேலை என்பதெல்லாம் கல்வித் தகுதியை வைத்தே அளவிடப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டின் கொள்கைகள் வேறுபட்டிருப்பது இயல்பு தான். நமது நாட்டின் கொள்கை என்பதை வேறு. ஆஸ்திரேலியா படித்தவர்களை வரவேற்கும் நாடு. முன்னேற்றமே அவர்களின் குறிக்கோள். நமது நாடு படிக்காத வங்காளதேசிகளை வரவேற்கும் நாடு. சொர்க்கமே நமது நாட்டின் குறிக்கோள்! நாட்டுக்கு நாடு கொள்கைகள் வித்தியாசப்படுகின்றன!
ஆனால் சமீப காலங்களில் இந்தியர்களின் வேலை வாய்ப்புக்கள் வங்காளதேசிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. இந்நாட்டு குடிமக்களான இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதனால் வெளிநாடு வேலை தேடி போகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் போகும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள். இக்கரையே கறைபட்டுப் போனால் அக்கரைக்குத் தான் அனைவரும் அக்கறை காட்டுவார்கள்!
வருங்காலங்களிலும் இரு நாடுகளுக்கான நல்லுறவு தொடரும் என்பதே நமது நம்பிக்கை!
No comments:
Post a Comment