தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என்கிற கோரிக்கை, இப்போது அப்போது அல்ல, நீண்ட நாள்களாக இந்திய சமூகத்தினர் கேட்டுக் கொண்டு வரும் ஒரு கோரிக்கை.
இப்போது இந்தப் பிரச்சனையை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்.என். ராயர் அவர்கள்.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ம.இ.கா. வின் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களை இந்த பிரச்சனையில் கொஞ்சம் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மலேசியாவின் மூன்றாவது பெரிய சமூகம் என்றால் அது இந்திய சமூகம் தான். இங்கு மூன்று பெருநாள்களும் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுவது இயல்பே. அதில் ஹரிராயா, சீனப் பெருநாள் இவை இரண்டும், இரண்டு நாள்கள் விடுமுறை. இந்திய மக்களின் பெருநாள் என்பது ஒரே ஒரு நாள் தான். நிச்சயமாக இந்த ஒரு நாள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
தீபாவளி போன்ற பெருநாள் காலங்களில் வெளியூர்களில் இருந்து பெற்றோர்களைப் பார்க்கப் போவது, சொந்தபந்தங்களைப் பார்க்கப் போவது என்பதெல்லாம் எல்லா இனங்களிலும் உள்ளது தான். இதில் யாரும் விதிவிலக்கல்ல. எப்படிப் பார்த்தாலும் ஒரே நாள் போதுமானதல்ல.
இந்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் மாண்புமிகு ராயர் அவர்கள்.
இந்தியர்களின் பிரதிநிதி என்றால் அது இன்றைய நிலையில் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் தான். அவர் தான் அமைச்சரவையில் உள்ளவர். அது மட்டும் அல்லாமல் இன்றைய அரசாங்கமும் இன்னும் நீடிக்கிறது என்றால் இன்னும் 15-வது தேர்தல் வரை நீடிக்கும் என்றால் அதுவும் எதிர்கட்சிகளின் ஒரு கூட்டு ஒப்பந்தத்தினால் தான்.
இதில் டத்தோ சரவணன் மட்டும் அல்ல மற்றைய எதிர்கட்சிகளும் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண வேண்டும். தேசிய முன்னணி அரசாங்கத்தில் ம.இ.கா.வால் இதனை நிறைவேற்ற முடியவில்லை. தேசிய முன்னணி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது. அப்போது ம.இ.கா. வாய் திறந்ததா என்றும் நமக்குத் தெரியவில்லை! ஆனால் இன்றைய நிலையோ வேறு. ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் கைகோர்த்திருக்கின்றன.
இன்றைய நிலை நமக்குச் சாதகமாக உள்ளது. அணுகுமுறை சரியாக இருந்தால் "இரண்டு நாள் விடுமுறை" என்பது சாத்தியம் ஆகலாம்.
இரண்டு நாள் விடுமுறை சாத்தியமே!
No comments:
Post a Comment