நமது மலேசிய நாட்டில் கடந்து மூன்று வருடங்களில் தற்கொலை செய்து கொள்ளும் நேப்பாளத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மையில் கவலை அளிக்கிறது.
அதற்காக மற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களோ ஏன் மலேசியத் தொழிலாளர்களோ தற்கொலை செய்து கொள்வதில்லை என்று சொல்லிவிட முடியாது. தகவல்கள் இல்லை! அவ்வளவு தான்!
கடந்து மூன்று ஆண்டுகளில் சுமார் 140 நேப்பாளத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மனித உரிமை ஆணையமான சுஹாக்காம் கூறுகிறது. இந்த 2021 ஆண்டுக்கான எந்த தகவல்களும் இதுநாள் வரை கிடைக்கவில்லை.
இந்த தற்கொலைகளுக்கான காரணம் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வேலை இல்லை என்பதே பிரதான காரணமாக விளங்குகிறது. வேலை இல்லை. தொற்றினால் பயம். சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அனுமதியில்லை. அங்கும் இல்லை. இங்கும் இல்லை. முச்சந்திக்கு வந்தாயிற்று. சாப்பாட்டுக்கு வக்கில்லை. இப்படி பல காரணங்கள் நேப்பாளிகளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகின்றன.
ஆனால் நமது கேள்வி எல்லாம் நேப்பாள நாட்டு தூதரகம் ஏன் மௌனம் சாதிக்கிறது என்பது தான். களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டியவர்கள் கோவிட்-19 என்று சொல்லி கள்வர்கள் கூடாரங்களில் ஒளிந்து கொள்வது போல இவர்களும் ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ!
இந்த தற்கொலைகளுக்கு எல்லாத் தரப்பினர்களுக்கும் பங்கு உண்டு. முதலில் அவர்களின் முதலாளிகள். நேப்பாளத் தூதரகம். மலேசிய அரசாங்கம். அவர்களால் பயன்பெற்ற- பணம் சம்பாதித்த முதலாளிகள் அந்தப் பொறுப்பினை எடுத்திருக்க வேண்டும். இறந்த போன தொழிலாளர்களுக்குப் பதிலாக மீண்டும் அவர்களால் நேப்பாளத்திலிருந்து வேறு தொழிலாளார்களை வரவைக்க முடியும்! அவ்வளவு எளிதில் அவர்களுக்குத் தொழிலாளர்கள் கிடைத்து விடுகின்றனர்! அந்த அளவுக்கு மலேசிய அரசாங்கம் ரொம்பவும் 'தாராளமாக' ஆடு மாடுகளை இறக்குமதி செய்வது போல நேப்பாளத்திலிருந்து தொழிலாளர்கள் 'இறக்குமதி' செய்ய அனுமதி கொடுத்து விடுகின்றனர்.
இந்த நிலையில் முதலாளிகள் 'இருந்தால் என்ன! இறந்தால் என்ன!' என்கிற போக்கைத் தான் கடைப்பிடிப்பார்கள். அதில் சந்தேகமில்லை!
வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பது தான் இந்த செய்தியில் இருந்து நமக்குத் தெரிய வருவது.
இதில் யார் பொறுப்பு? ஒருவருமே இல்லை என்பது தான் நிதர்சனம்!
No comments:
Post a Comment