இப்போது மலேசியாவில் இணையதள மூலமாக வியாபாரங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அந்த ஆய்வு எந்த அளவுக்கு உண்மையானது என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை.
ஆய்வுகள் என்றுமே ஒருதலைபட்சமானது! ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அவைகள் செயல்படுகின்றன! அது போதும்!
எல்லாத் துறைகளிலும் ஏமாற்று வேலை உள்ளது போல நிச்சயமாக இந்த இணையதளங்களில் ஒருசில நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் தண்ணிக் காட்டுகின்றன என்பதை நான் அறிவேன்.
நல்ல நிறுவனங்கள், பெயர் பெற்ற நிறுவனங்கள் இவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று நீங்கள் நம்பும் நிறுவனங்கள் - இவைகளிடம் நீங்கள் பொருள்களை வாங்குவது உங்களுக்கு நட்டம் வராது. பொது மக்களை ஏமாற்றும் நிறுவனங்களும் நிறையவே இருக்கின்றன. அவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த சீனப்பெண்மணி ஒருவர் இணையதளம் மூலம் நிறையதடவை ஏமாந்து போயிருக்கிறார். விலை குறைவு என்று ஏமாந்தது தான் மிச்சம். விலை குறைவு என்று ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் கிடைத்ததோ தரமற்ற, பயன்படுத்த முடியாத ஒரு பொருள். அவைகளை மாற்றவும் வழியில்லை. அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது!
புகழ் பெற்ற நிறுவனங்கள் ஏமாற்றுவதில்லை. அவர்களுக்குத் தொடர்ச்சியான வியாபாரம் வேண்டும். அதனால் அவர்கள் தங்களது நிறுவனத்தின் பெயர் கெடுவதை விரும்பமாட்டார்கள்.
பலருக்கு இணையதளங்கள் ஆபத்து, அவசர நேரத்தில் கை கொடுக்கின்றன என்பது உண்மை தான். ஊரடங்கு நேரத்தில் எங்கும் போக வழியில்லை. அப்போது பெரும்பாலான வியாபாரங்கள் இணையதளங்கள் மூலமாகவே நடைப்பெற்றன. இன்றும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கணினி வியாபாரங்கள் பல இணையதளங்களின் மூலமாக நடைபெறுகின்றன.
இன்றைய நிலையில் ஏமாற்று வேலை என்பது இணையதளங்களில் அதிகம் தான். அது நாம் எந்த நிறுவனத்தில் நமது பொருள்களை வாங்குகிறோம் என்பதைப் பொறுத்தது. நமக்குத் தெரியாத, அறியாத நிறுவனங்களில் பொருள்களை வாங்குவது நமக்கு ஏமாற்றத்தைத் தரும்.
நாம் தேடும் ஒரு பொருள் இணையத்தில் கிடைக்கும் என நாம் நிச்சயம் நம்பலாம். யாரோ ஒருவரிடம் அந்தப் பொருள் இருக்கும். அது தான் இணையதளத்தின் விசேஷம்! கடை கடையாய் போய் தேடுவதை விட இணையத்தில் ஒரு சில மணி நேரங்களில் நாம் தேடி கண்டுபிடித்து விடலாம்!
இணையதள வியாபாரம் தேவை தான்! அதே போல எச்சரிக்கையும் தேவை!
No comments:
Post a Comment