PARTI KUASA RAKYAT
மலேசிய அரசியலில் புதியதொரு கட்சி உதயமாகியிருக்கிறது!
15வது தேர்தலை நோக்கி பல கட்சிகள் படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்போது புதிதாக ஒன்று. Parti Kuasa Rakyat. இதற்கு முன்னரே பல கட்சிகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் வரிசையில் காத்துக் கிடக்கின்றன!
இந்த கட்சிக்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவென்றால் இந்த கட்சிக்குத் தலைமை தாங்குபவர் இன்றைய பிரதமர் இஸ்மாயில் சப்ரியின் மூத்த சகோதரர், கமாருஸமான் யாக்கோப். இந்நாள் வரை அவரை யாருக்கும் தெரியாத நபராக இருந்தார். இப்போது தான் அவருக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த வெளிச்சம் எந்த அளவு பயன்கொடுக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்!
இதற்கிடையே மலாய்க்காரர்களுக்கு இத்தனை கட்சிகள் தேவையா என்னும் கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. என்ன செய்வது? திருடர்களும், கொள்ளையர்களும் மலிந்துவிட்ட அரசியலில் மக்கள் யாரைத் தேர்வு செய்வார்கள்?
அது சரி, நமது இந்தியர்களின் நிலை என்ன? நமக்கும் நிறையவே கட்சிகள் உண்டு! இது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் இருந்தவர்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்! பல கட்சிகள்! ஆனால் எந்த கட்சியின் பெயரும் நினைவுக்கு வரவில்லை. இனி மேல் இவர்களைப் பற்றி செய்திகள் வரும். அதை விட, தேர்தலில் போட்டியிட தங்களுக்கு எத்தனை நாடாளுமன்ற, சட்டமன்ற சீட்டுகள் தர வேண்டும் என்கிற பேரம் நடக்கும்!
என்ன செய்வது? இதனையெல்லாம் நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும். இவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் "பார்ப்போமே!" என்கிற அசட்டுத் தைரியம் இவர்களுக்கு உண்டு. மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் வேறு வகைகளில் தங்களுக்கு ஏதாவது பதவிகள் கிடைக்கும் என்று இப்போதே கணக்குப் போட்டு வைத்திருப்பார்கள்!
எந்தக் கட்சியானால் என்ன? மக்களுக்குச் சேவை செய்ய யார் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும். சேவையை மறந்துவிட்டு தேர்தல் காலங்களில் அரிசி, பருப்பு, சாடின் என்று ஏழை மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்! உங்களால் கொடுக்க முடிந்தால் வீடுகளைக் கொடுங்களேன்! அதவாது அவர்களுக்கு உபயோகமாக இருக்குமே!
பழைய கட்சிகளோ, புதிய கட்சிகளோ "இவர்களால் நமக்கு என்ன பயன்" என்று யோசித்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். ஏமாற்றுப் பேர்வழிகளை விரட்டி அடியுங்கள்!
No comments:
Post a Comment