Monday 4 October 2021

ஒன்னும் அதிசயமில்லே!

 

        முன்னாள் மாணவன்-ஆசிரியை            இந்நாள் கணவன் - மனைவி

ஒரு முன்னாள் ஆசிரியை தனது முன்னாள் மாணவனை திருமணம் செய்து கொண்டிருப்பது ஓர் அதிசயமாகப் பேசப்படுகிறது. அந்த ஆசிரியைக்கு மாணவனை விட பதினைந்து வயது மூப்பு . அது தான் ஏதோ பார்க்க முடியாததைப் பார்த்துவிட்டது போல இவர்களின் திருமணத்தைப் பார்க்கின்றனர்!

ஆசிரியர்-மாணவி, ஆசிரியை-மாணவர் போன்றவர்கள் திருமணங்கள்  உலகெங்கிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது எல்லா சமுதாயங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான்.

நமது நாட்டில் கூட இது போன்ற திருமணங்கள் நடைபெறுகின்றன. கட்டுப்பாடு என்று ஒன்றுமில்லை. அது அவர்களது விருப்பத்தின் பேரில் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு இளைஞன் வயதான பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டது நமது நாட்டில் நடந்திருக்கிறது. அந்தப் பெண்மணியின் குழந்தைகளுக்கெல்லாம் அவன் தான் தகப்பன்!

சரி, இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்ப்போம். வயதான ஆண்கள் மிக மிக வயது குறைந்த  இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை ஏன் நாம் அது பற்றிப் பேசுவதில்லை? அது உண்மையில் மிகக் கொடுமையான விஷயம். அந்த இளம் பெண்களின் விருப்பமின்றி நடக்கும் திருமணங்கள் என்ன சொர்க்கத்திலா நிச்சயக்கப்படுகிறது? எல்லாம் பொருளாதார சீர்கேடுகளினால் நடப்பது இந்தத் திருமணங்கள். வெறும் பண பலத்தை வைத்து இந்த திருமணங்கள் நடபெறுகின்றன.

இது ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த உலகம்.  ஆண்கள் வயது குறைந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை இவர்கள் குறை சொல்லுவதில்லை. ஆனால் பெண்கள் இது போன்ற திருமணங்களைச் செய்து கொண்டால் அது பெரியதொரு செய்தியாக மாறி விடுகிறது. 

ஆனால் மேலே காணப்படும் இந்த செய்திக்கு யாரும் பரபரப்புக் காட்டவில்லை. இது போன்ற செய்திகள் எல்லாம் ஏற்கனவே வந்த போய்விட்டன. அவர்கள் வாழ்க்கைக்கு அவர்களே பொறுப்பு.

இந்த செய்தி வெளியாவதற்குக் காரணம் அந்த மாணவ மணமகன் தான்! அவன் தான் அந்த இரு புகைப்படங்களையும் தனது முகநூலில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளி உலகத்திற்குக் கொண்டுவந்தவன்!

நாமும் அந்த மணமக்களை வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment